கடலூர் மாவட்டத்திலேயே மாற்று இடத்தை தேர்வு செய்து அதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் சர்வதேச மையம் அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது – சத்திய ஞானசபையின் மாண்பை குறைக்கும் வகையில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் அவர்களின் தெய்வீகப் பணிகளுக்காக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தானமாக வழங்கிய நிலத்தில் அமைக்கப்பட்ட பெருவெளியில், ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச நாளன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி ஜோதி வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, வள்ளலார் அவர்கள் நிறுவிய சத்திய ஞானசபை பெருவெளியில் புதிய கட்டுமானம் உள்ளிட்ட எந்தப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது எனவும், பெருவெளி பொதுமக்கள் கூடி ஜோதி வழிபாடு நடத்துவதற்கான பொது வெளியாக தொடர வேண்டும் எனவும் கூறி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வள்ளலார் அவர்களின் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாகவும், நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் காரணமாகவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச மையத்திற்கான கட்டுமானப் பணிகள் தற்போது காவல்துறை பாதுகாப்புடன் மீண்டும் தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்த நாள் முதல் இன்று வரை அத்திட்டத்திற்கு எதிராக போராடி வரும் பொதுமக்கள் மற்றும் வள்ளலாரின் பின்பற்றாளர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க மறுத்து பிடிவாதப் போக்கில் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்கியிருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, வள்ளலார் அவர்களின் கொள்கைக்கும், பக்தர்களுக்கும் எதிரான வகையில் நடைபெறும் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்துவதோடு, கடலூர் மாவட்டத்திலேயே மாற்று இடத்தை தேர்வு செய்து அதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று டி.டி.வி.தினகரன் தெரிவிக்கப்பட்டுள்ளது.