மேற்கு வங்க ஆரிசியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் அமைக்கப்பட்ட 2016-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் நியமனக் குழு செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால், அந்த நியமனக் குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட 24,000 பேரின் பணிகளும் ரத்தானது.
மேற்கு வங்கத்தில் கடந்த 2014 – 2016 வரை நடந்த அரசு ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதாவது, தகுதித் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மெரிட் பட்டியலில் இடம் பெற்றனர். பலர் வெற்று விடைத்தாள்களை, பெயர், முகவரியுடன் சமர்ப்பித்து, உதவி ஆசிரியர்களாக நியமன ஆணைகளை பெற்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஏராளமான புகார் மனுக்கள் குவிந்தன.
மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தில், கூடுதல் நியமனக் குழு முறைகேடாக உருவாக்கப்பட்டு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தோல்வியடைந்தவர்களையும், இந்தக் குழு தேர்வு செய்துள்ளதாக வழக்கை விசாரித்த சிபிஐ-யும் குற்றஞ்சாட்டியது.
இந்த வழக்கின் மீதான விசாரணைகள் கடந்த மார்ச் 20-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேபாங்சு பசாக், ஷபார் ரஷிதி அடங்கிய அமர்வு, “மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் அமைக்கப்பட்ட 2016-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் நியமனக் குழு செல்லாது. இதனால், அந்த நியமனக் குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட 24,000 பேரின் பணிகளும் ரத்தாகிறது.
வெற்று விடைத்தாள்களைக் கொடுத்திருந்தும் கூட சட்டவிரோதமாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பள்ளி ஊழியர்கள் தாங்கள் இதுவரை பெற்ற சம்பளத்தை 4 வாரங்களுக்குள் திருப்பியளிக்க வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அந்தத் தொகையை சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டிய பொறுப்பை ஏற்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், சர்ச்சைக்குள்ளான அந்தத் தேர்வை எழுதிய 23 லட்சம் பேரின் ஓஎம்ஆர் விடைத்தாள்களையும் மறு மதிப்பீடு செய்யும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க ஆசிரியர் சேவை ஆணையம் புதிதாக பணிநியமன நடவடிக்கைகளை முன்னெடுக்கும்படி உத்தரவிட்டது.
இந்த வழக்குக்கு தடை கோரிய மனுக்களை மொத்தமாக நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, சிபிஐ இவ்விவகாரத்தில் விசாரணையை மேலும் முன்னெடுத்துச் செல்லும்படி வலியுறுத்தியுள்ளது. மூன்று மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்படியும் அறிவுறுத்தியுள்ளது.
ரத்து செய்யப்பட்ட பணிநியமன குழுவால் தேர்வு செய்யப்பட்ட 24,000 பேர் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2016-ஆம் ஆண்டு தொட்டு பணியாற்றி வந்தனர். நீதிமன்ற தீர்ப்பால் அந்த 24 ஆயிரம் பேரின் வேலையும் காலியானது. 2016-ஆம் ஆண்டு நடந்த மாநில அளவிலான தகுதித் தேர்வில் 23 லட்சம் பேர் கலந்து கொண்டனர். 24,000 காலிப் பணியிடங்களுக்கு அத்தேர்வு நடத்தப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது.
மேற்கு வங்க ஆசிரியர் சேவை ஆணையம் புதிதாக பணிநியமன நடவடிக்கைகளை முன்னெடுக்கும்படி உத்தரவிட்டதால் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருந்த வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த வழக்கில் முதன்முதலில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டவர் கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்குலி. அவர் தற்போது பாஜக சார்பில் தம்லுக் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.