தென்சென்னை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண் -13 ல், திமுகவினர் வாக்குச்சாவடியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், எனவே அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளதாகவும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தென்சென்னை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி 122 வட்டம், வாக்குச்சாவடி எண் -13 ல், திமுகவினர் வாக்குச்சாவடியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தென்சென்னை தேர்தல் அதிகாரியை சந்தித்து அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டுமென்று கோரிக்கை மனு அளித்தேன்.
தென் சென்னை தொகுதி, மயிலாப்பூரில் 122வது வட்டத்தில் 50 திமுகவினர் புகுந்து வாக்குப்பதிவு மையத்தில் இருந்த ஏஜென்டுகளை அடித்து துரத்திவிட்டு கள்ள ஓட்டுப் போட முயற்சி செய்தார்கள். இதுதொடர்பாக பாஜக சார்பில் தேர்தல் பார்வையாளரிடம் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பின் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், உள்ளே புகுந்தவர்கள் பாஜக ஏஜென்டுகளை வெளியேற்றிவிட்டனர். எனவே, அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த நாங்கள் கேட்டிருக்கிறோம்.
இதேபோல், சாலிகிராமம், சோழிங்கநல்லூர் பகுதிகளிலும் நடந்துள்ளது. மேலும், பல இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள் கொத்து கொத்தாக நீக்கப்பட்டுள்ளன. தி.நகரில் 199, 200, 201 மற்றும் 202 இந்த வாக்குச்சாவடிகளில் ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. நிறைய குடும்பங்களில் பெயர்கள் விட்டு போயுள்ளன. எனவே, தேர்தல் ஆணையம் இதில் கவனம் செலுத்த வேண்டும். திமுகவினர் இதுபோன்ற அராஜகங்களில் ஈடுபடக்கூடாது, என்பதை நாங்கள் வலியுறுத்தி உள்ளோம்.
மேலும், தேர்தல் ஆணையத்துக்கு ஒரு வேண்டுகோள். வெள்ளிக்கிழமை தேர்தல் நடத்துகின்றனர். அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால், பலரும் ஊருக்குச் செல்கின்றனர். இதனால், வாக்கு சதவீதம் குறைந்து விடுகிறது. வாக்களிக்க வேண்டும் என்ற விதிமுறை மாறி அது விடுமுறையாக மாறிவிடுகிறது. எனவே, வெள்ளிக்கிழமையும், திங்கள்கிழமையும் தேர்தல் நாளாக அறிவிக்கக்கூடாது. தேர்தலை புதன் அல்லது வியாழக்கிழமைகளில் நடத்துவது நல்லது. இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்.
அதேபோல், நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோடிக்கணக்கில் தேர்தல் ஆணையம் செலவு செய்கிறது. ஆனால் அதற்கு எந்தவித பலனும் இல்லை என்பதை சென்னை உள்ளிட்ட வாக்குப்பதிவு சதவீதங்கள் நமக்கு காட்டுகின்றன. மக்கள் புரிந்துகொள்ளாத வகையில் கோடிக்கணக்கான ரூபாயை செலவழிப்பதைவிட, வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர்கள் இருப்பதில் தேர்தல் ஆணையம் அதிக கவனம் செலுத்த வேண்டும். வாக்களிப்பது வலிமையானது. ஆனால், வாக்காளர் பட்டியில் பெயர் விடுபட்டு இருப்பது வலி மிகுந்தது”, என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.