“ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது. இதில் நானும் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி” என்று சென்னையில் வாக்குச் செலுத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பேசினார்.
தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட கிண்டி – வேளச்சேரி சாலையில் உள்ள அட்வெண்ட் கிறிஸ்தவ நடுநிலைப் பள்ளியில் தனது மனைவியுடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். தமிழகத்தில் இதற்கு முன் இருந்து ஆளுநர்கள், தங்களின் சொந்த மாநிலத்துக்குச் சென்று வாக்களித்து வந்தனர். ஆனால், ஆளுநர் ரவி தனது வாக்கினை பிஹாரில் இருந்த தென் சென்னை தொகுதிக்கு மாற்றியுள்ளார். அதன்படி, இன்று சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி வாக்களித்தார்.
வாக்குச் செலுத்தியபின் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது. இதில் நானும் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி. வாக்கு செலுத்துவது குடிமக்களின் மிக முக்கிய கடமையாக இருக்கிறது. மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். குறிப்பாக, முதல் முறை வாக்காளர்கள் ஆர்வமுடன் சென்று வாக்களிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.