கள்ளழகர் திருவிழாவின்போது தண்ணீர் பீய்ச்சுவதற்கு கட்டுப்பாடு விதித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்துள்ளது உயர் நீதிமன்ற மதுரை கிளை. முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பாரம்பரிய முறையில் கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக, மதுரை சேர்ந்த ரஞ்சித் குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதிலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் சிறப்பானது. அழகர் ஆற்றில் இறங்கும் போது அவர் மீது தண்ணீர் பீய்ச்சுவதை நேர்த்திக் கடனாக வைத்து பக்தர்கள் செய்வது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும். பாரம்பரிய முறையில் மட்டுமே தண்ணீர் பீய்ச்ச வேண்டும் என தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி அருள்மிகு கள்ளழகர் கோவிலின் இணை ஆணையரால் அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே எதிர்சேவை நிகழ்வின்போது கள்ளழகரின் மீது தண்ணீரை பீய்ச்ச இயலும். இதனால் என் போன்றோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இது தனிநபரின் வழிபடும் உரிமைக்கு எதிரானது. ஆகவே முறையாக முன் அனுமதி பெற்றவர்கள் மட்டும், பாரம்பரிய முறையில் கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கைச் விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு, “கள்ளழகரின் சிலை, ஆபரணங்கள், குருக்கள் மீது தண்ணீரை அதிக அழுத்தத்தில் பீய்ச்சுவதை தடுக்க வேண்டும். ஆனால் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதை எவ்வாறு தடுப்பது?” எனக் கேள்வி எழுப்பினர்.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் கூறுகையில், “தோல் பைகளில் தண்ணீர் நிரப்பி, இடுப்பில் கட்டிக்கொண்டு அழுத்தம் கொடுத்தே தண்ணீர் பீய்ச்சுவர். கோடை காலத்தில் தண்ணீர் பீய்ச்சுவது அனைவருக்கும் இதமாகவே அமையும். கள்ளழகரின் ஆசி பெரும் வகையிலேயே தண்ணீர் அனைவரின் மீதும் பீய்ச்சப்படுகிறது. இதன் காரணமாகவே, தண்ணீர் பீய்ச்சுபவர்கள் பெரும்பாலும் அழகர் வேடமணிந்திருப்பர். மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவால் பக்தர்கள் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே தண்ணீர் பீச்சி அடிக்கும் கட்டுப்பாடுகளை விளக்கிக் கொள்ள வேண்டும்” என வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள், “கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது, பிற மாவட்டங்கள் மட்டுமன்றி பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வந்து கலந்து கொள்வர். லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் பெரும்பாலான பக்தர்கள் வெறும் காலில் நடந்து வந்து கலந்து கொள்வர். கோடை காலத்தில் வெயிலைக் குறைக்கும் விதமாகவே தண்ணீர் பீய்ச்சப்படுகிறது.
இந்த வழக்கம் வேறு பல கோவில்களிலும் நடைமுறையில் உள்ளது. இதனால் பலர் நேர்த்திக்கடன் வைத்து தண்ணீர் பீய்ச்சுவர். மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவால், தற்போதுவரை 7 பேர் மட்டுமே தண்ணீர் பீய்ச்ச அனுமதி பெற்றுள்ளனர். இது பாரம்பரிய நடைமுறையை பாதிப்பதோடு, பக்தர்களின் மனதையும் புண்படுத்தும் என கருதுவதால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.
முன்னதாக, “கள்ளழகர் செல்லும் பாதை மற்றும் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வின் போது எவ்வளவு பேர் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்வில் கலந்து கொள்வர்? தற்போது 7 பேர் மட்டுமே தண்ணீர் பீய்ச்ச அனுமதி பெற்றுள்ள நிலையில், இது பாரம்பரிய நடைமுறையை பாதிக்காதா?. இவை தொடர்பாக ஏதும் புள்ளிவிவரங்கள் உள்ளதா? எதனடிப்படையில் நபர்களை தேர்வு செய்கிறார்கள்? மதுரை மாவட்ட ஆட்சியர் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பித்தார்? சட்ட அலுவலர் அல்லது கோயில் நிர்வாகத்திடம் ஆலோசிக்கப்பட்டதா?” என்பது குறித்து அருள்மிகு கள்ளழகர் கோவிலின் இணை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா விளக்க கடிதம் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.