“காங்கிரஸ் கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக உழைத்தேன். 60 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, அசாமின் நல்பாரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “2014-ல் நம்பிக்கையையும், 2019-ல் உறுதியான உணர்வையும் கொண்டு வந்தேன். தற்போது அசாம் மண்ணுக்கு 2024-ஆம் ஆண்டு உத்தரவாதத்தை கொண்டு வந்துள்ளேன். இது மோடியின் கேரண்டி.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து பயனாளிகளுக்கும் இலவச ரேஷன் தொடர்ந்து விநியோகிக்கப்படும். தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கொள்கைகளை அமல்படுத்துவதில் எந்தவித பாரபட்சமும் இல்லை. அதன் பலன்கள் அனைத்து குடிமக்களையும் சென்றடையும்.
70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் பாரபட்சம் இருக்காது. இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடைமுறைபடுத்தப் பட்டுவருகிறது. மோடியின் உத்தரவாதத்துக்கு வடகிழக்கு பகுதிகளே சாட்சி.
காங்கிரஸ் கட்சியால் வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரச்சினைகள் மட்டுமே கொடுக்க முடிந்தது. காங்கிரஸ் பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக உழைத்தேன். 60 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன்” என்றார். அசாமில் உள்ள 14 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.