மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், கோவை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தனது பிறந்தநாளை வாக்காளர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
நாளை மறுநாள் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா கூட்டணி சார்பில் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், இன்று காலை ராமலிங்க நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இன்று தனது 60வது பிறந்த நாளை முன்னிட்டு, கணபதி ராஜ்குமார், அப்பகுதியில் திமுக கட்சியினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது அங்கிருந்த குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு அவர் கேக்குகளை வழங்கினார். அவருக்கு அப்பகுதி மக்கள் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கோவை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதே போல் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன், நாதக வேட்பாளர் கலாமணி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.