புதுச்சேரியில் இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம் மேற்கொண்டார்.
புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்தநிலையில் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.
பிரசார பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:- பாஜக தேர்தல் அறிக்கையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தொடர்பாக எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. மத்திய பாஜக அரசு புதுச்சேரி மக்களை புறக்கணிக்கிறது. புதுச்சேரிக்கு முழுமையான மாநில அந்தஸ்து கிடைக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் புதுச்சேரியில் மூடப்பட்ட ஆலைகள், ரேஷன்கடைகள் திறக்கப்படும்.
இந்தியாவின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் நாம் பாடுபட வேண்டும். அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரிக்கு யூனியன் பிரதேச அங்கீகாரம் கொடுத்தோம். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுப்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டது. 1950-ம் ஆண்டின் அரசியலமைப்பு சட்டத்தில் கூறியபடி தான் காங்கிரஸ் கட்சியானது உள்ளது. காங்கிரஸ் கட்சி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை உறுதியாக நிறைவேற்றும்; மாநில அந்தஸ்தை பெற்றுத்தருவோம்; ஆனால் மோடியோ, ரங்கசாமியோ வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. புதுச்சேரி முதலமைச்சரை பார்த்து பரிதாப்படுகின்றேன்; அவர் பிரதமர் மோடியிடம் சரணடைந்துவிட்டார்.
இந்தியா முழுவதும் 444 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கியவர் பிரதமர் மோடி. மத்திய பாஜக அரசு சில மாநிலங்களில் தேர்தல் முறையில் ஆட்சிக்கு வராமல் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்கிறது. பாஜக கொள்கையை ஏற்றுக்கொள்ளாத அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுக்கு தொல்லை கொடுக்கும் வேலையில் பிரதமர் மோடியின் அரசு ஈடுபட்டு வருகின்றது.
பிரதமர் மோடியும், மத்திய மந்திரி அமித்ஷாவும் சலவை இயந்திரத்தை வைத்து எம்.எல்.ஏ, எம்.பி.கள் மீதும் பொய் வழக்கு போடுவது; குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரை அரசு அமைப்புகளை கொண்டு பாஜகவிற்கு கொண்டு வருகிறார்கள். கவர்னர்கள் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுகளுக்கு நெருக்கடியை கொடுக்கின்றது பாஜக அரசு என்று கார்கே கூறினார்.