“இனியும் பாஜக தேர்தல் அறிக்கையை நம்புவது சரியாக இருக்காது” – மல்லிகார்ஜுன கார்கே

பாஜகவின் தேர்தல் அறிக்கைக்கு எதிர்வினையற்றியுள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளுக்கு எதுவும் செய்ய முடியவில்லை” என்று பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே செய்தியாளர்களிடம் கூறுகையில், “பிரதமர் மோடி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன். குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவேன், அதற்கு சட்டபூர்வ உத்தரவாதம் அளிப்பேன் என்று தெரிவித்திருந்தார். இதற்காக நாடுமுழுவதும் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மத்திய அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று இந்தாண்டு தொடக்கத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

இளைஞர்கள் வேலை தேடி அலைகின்றனர். பணவீக்கம் அதிகரித்துள்ளது. பிரதமருக்கு இந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. தனது பதவிக் காலத்தில் நாட்டு மக்களுக்கு பயனணளிக்கும் எந்தவொரு பணியையும் அவர் செய்யவில்லை. நாட்டு மக்களிடம் சொல்வதற்கு அவரிடம் எதுவும் இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. இனியும் பாஜக தேர்தல் அறிக்கையை நம்புவது சரியாக இருக்கது” எனத் தெரிவித்தார்.

முன்னதாக வரும் மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். ‘மோடியின் உத்தரவாதம்’ என்ற டேக் லைனுடன் ‘சங்கல்ப் பத்திரம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தத் தேர்தல் அறிக்கையில் 14 முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. புதுடெல்லியில் உள்ள பாஜக தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய பிரதமர் மோடி கூறுகையில், “இன்று ஒரு புனிதமான நாள். நாட்டின் பல்வேறு நகரங்களில், நவ் வர்ஷ் கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் 6வது நாளான இன்று நாம் காத்யாயனி அன்னையை வணங்குகிறோம். அவர் தனது இரண்டு கரங்களிலும் தாமரையை ஏந்தியுள்ளார். இந்தத் தற்செயல் ஒற்றுமை மிகப்பெரிய ஆசீர்வாதம். இன்னும் சிறப்பாக சொல்வதென்றால் இன்று அம்பேத்கரின் பிறந்தநாளும் கூட. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்களை உத்தரவாதமாக செயல்படுத்தி உள்ளது. பாஜக தேர்தல் அறிக்கையின் புனிதத்தை மீட்டெடுத்துள்ளது” என்று தெரிவித்தார்.