டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தான் கைது செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏப்ரல் 15-ம் தேதி விசாரிக்க உள்ளது.
நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. கேஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 15-ம் தேதியுடன் முடிவடைவதால், அவரது மேல்முறையீட்டு மனு மீதான இந்த விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, அரவிந்த் கேஜ்ரிவாலை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க கடந்த 1-ம் தேதி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கேஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது அல்ல என கடந்த 9-ம் தேதி தீர்ப்பளித்தது. சாட்சியங்களின் வாக்குமூலங்கள், இடைத்தரகர்களின் தொடர்பு, கோவா சட்டப்பேரவைத் தேர்தல் செலவுக்காக பணம் ஒப்படைக்கப்பட்டதற்கான குறிப்புகள் உட்பட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக நீதிபதி ஸ்வர்ண காந்தா தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங், திஹார் சிறையில் ஜன்னல் வழியாக மட்டுமே கேஜ்ரிவாலை அவரது மனைவி சுனிதா கேஜ்ரிவால் சந்திக்க திஹார் சிறைத் துறை அனுமதி வழங்கியதாகவும் இது கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.
“அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவி அவரைச் சந்திக்க விண்ணப்பித்தபோது, நீங்கள் அவரை நேருக்கு நேர் சந்திக்க முடியாது. ஆனால், ஜன்னல் வழியாகச் சந்திக்கலாம் என்று கூறப்பட்டது. அதன்படி, ஜன்னல் வழியாக மட்டுமே சந்திக்க அனுமதி வழங்கினர்.
ஜன்னல் வழியாகத்தான் சந்திக்க வேண்டும் என்று சிறை விதிகள் கூறவில்லை. இருந்தும், மூன்று முறை டெல்லி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவரை சிறை நிர்வாகம் இப்படித்தான் நடத்துகிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உரிமைகளைப் பறிக்க வேண்டாம் என்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கேட்டுக்கொள்கிறேன். ஒரு சர்வாதிகாரியாக இருக்க முயற்சிக்காதீர்கள்” என்று சஞ்சய் சிங் தெரிவித்தார்.