பதஞ்சலி விளம்பர விவகாரத்தில், பிரபல யோகா குரு பாபா ராம்தேவ், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் ஆச்சார்ய பாலகிருஷ்ணா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியிருந்த நிலையில், அதனை உச்ச நீதிமன்றம் மீண்டும் ஏற்க மறுத்துவிட்டது. அதோடு, ‘இந்த வழக்கில் நாங்கள் தயவு காட்ட விரும்பவில்லை’ என்று காட்டமாக தெரிவித்துள்ளது.
பதஞ்சலி விளம்பர விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பதஞ்சலி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காத உத்தராகண்ட் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரபல யோகா குரு பாபா ராம்தேவ், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் ஆச்சார்ய பாலகிருஷ்ணா ஆகியோர் அண்மையில், உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியிருந்தனர்.
இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, “பதஞ்சலி விளம்பர விவகாரத்தில் ராம்தேவ் மற்றும் பால்கிருஷ்ணா ஆகியோர் மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தனர். ஆனால், அதில் எங்களுக்கு திருப்தி இல்லை. உங்கள் பிரமாணப் பத்திரத்தை ஏற்க நாங்கள் மறுக்கிறோம்.
நாங்கள் எதையும் கவனிக்காமல் இல்லை, நாங்கள் இந்த வழக்கில் தயவு காட்டவும் விரும்பவில்லை. மன்னிப்பு என்பது காகிதத்தில் மட்டுமே உள்ளது. இதை நாங்கள் ஏற்க மறுக்கிறோம். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் பதில் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. பாபா ராம்தேவ், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை இலகுவாக எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது” எனத் தெரிவித்துள்ளது.