இந்தியாவைவிட சீனாவுக்குத்தான் முதல் முன்னுரிமை என பிரதமராக இருந்த நேரு பேசிய காலம் உண்டு : எஸ் ஜெய்சங்கர்

இந்தியாவைவிட சீனாவுக்கே முதல் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என இந்திய பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு பேசிய காலம் உண்டு என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்ற தொழில் மற்றும் வர்த்தக சபை கூட்டத்தில் பேசிய எஸ். ஜெய்சங்கர், “முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தியாவை விட சீனாவுக்கு முன்னுரிமை அளிக்கும் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். 1950-ல், (அப்போதைய உள்துறை அமைச்சர்) சர்தார் படேல், அப்போதைய பிரதமர் நேருவிடம் சீனாவைப் பற்றி எச்சரித்தார்.

‘இதற்கு முன் இல்லாத வகையில் இன்று நாம் பாகிஸ்தான் சீனா என இருமுனைகளில் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறோம். சீனர்களின் நோக்கங்கள் வித்தியாசமாகத் தோன்றுவதால் அவர்கள் சொல்வதை நான் நம்பவில்லை; நாம் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்று படேல் நேருவிடம் கூறினார்.

ஆனா, நேரு, நீங்கள் சீனர்கள் மீது தேவையில்லாமல் சந்தேகப்படுகிறீர்கள் என்று படேலுக்கு பதிலளித்தார். மேலும், இமயமலையைத் தாண்டி யாரும் இந்தியாவை தாக்குவது சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.நா. பற்றிய விவாதம் நடந்தது. அந்த நேரத்தில் ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கொடுக்கப்பட வேண்டுமா? என்பதுதான் அந்த விவாதம். அப்போது நேரு, ‘ஐநா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக நாம் (இந்தியா) தகுதியானவர்கள். ஆனால் முதலில் சீனாவுக்கு இடம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என தெரிவித்தார்.

இன்று நாம் இந்தியா முதலில் என்பது பற்றி பேசுகிறோம். ஆனால், சீனாதான் முதல் என பிரதமராக இருந்த நேரு பேசிய காலம் உண்டு. முன்னாள் பிரதமர் நேருவின் கடந்த கால தவறுகளால்தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (பிஓகே) மற்றும் இந்தியப் பகுதியின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்தது.

இருப்பினும், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 10 ஆண்டுகளில், காலம் காலமாக இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் உறுதியாக உள்ளது.

இன்று நாம் நமது எல்லைகளைப் பற்றி பேசும்போது, ​​சிலர் நமது எல்லைகளை பழையபடி மாற்றுங்கள் என்று கூறுகிறார்கள். நமது எல்லைகள் இன்னமும் நமது எல்லைகள்தான். அதை நாம் ஒருபோதும் சந்தேகிக்கக்கூடாது. காஷ்மீர் விஷயத்தில் நம்மிடம் ஒரு பாராளுமன்ற தீர்மானம் (பிஓகே தொடர்பாக) உள்ளது. அதை அனைவரும் மதிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

முன்னதாக ராஜ்கோட்டில் பேசிய ஜெய்சங்கர், “ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கான வாய்ப்பு சாதகமாக உள்ளது. விரும்பத்தக்க பதவியைப் பெற விடாமுயற்சியுடன் பணியாற்றுவது அவசியம்” என தெரிவித்தார்.