போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் உள்ளிட்ட ஐந்து பேருக்கு ஏப்ரல் 16 வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் டெல்லியில் போதைப்பொருளை கையும் களவுமாக பிடித்தபோது முகேஷ், முஜிபுர் ரகுமான், அசோக் குமார் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் தீவிர தேடுதலுக்குப் பின்னர் ஜாபர் சாதிக்கும் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில், அவரது கூட்டாளியான சதா என்பவரும் பின்னர் சென்னையில் கைது செய்யப்பட்டார். இந்த ஐந்து பேருக்கும் இன்றுடன் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததையடுத்து அவர்கள் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஏப்ரல் 16 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரிய ஜாபர் சாதிக்கின் மனு மீதான விசாரணை ஏப்ரல் 5 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள ஜாபர் சாதிக்கிடம் குரல் மாதிரி பரிசோதனை எடுத்துக் கொள்ளலாம் என போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.