நாட்டில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சுங்கச்சாவடியே இருக்காது எனவும், ஆனால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வாக்குச்சாவடியே இருக்காது எனவும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தஞ்சை தொகுதி திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து இன்று காலை முதல் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திருவையாறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்குடி, சானூரப்பட்டி, புதுப்பட்டி, பூதலூர், வின்னமங்களம், திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் முரசொலிக்கு ஆதரவாக பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை.சந்திரசேகரன், உள்ளிட்ட நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செல்லும் இடங்களில் எல்லாம் ஏராளமான பெண்கள் உள்ளிட்டோர் பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தஞ்சை தொகுதி திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணிக்கு மிகுந்த எழுச்சி காணப்படுகிறது. குறிப்பாக மகளிர் பெருமளவில் ஆதரவு தெரிவிப்பதை காண முடிகிறது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் சுங்கச்சாவடி என்பதே நிச்சயமாக இருக்காது என்பதை உறுதியாக தெரிவித்துள்ளோம். ஆனால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வாக்குச்சாவடிகளே இருக்காது” என்றார்.
மேலும், “10 ஆண்டுகளுக்கு முன்னர் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற போது 375 முதல் 400 ரூபாய் இருந்த கேஸ் விலையை, தற்பொழுது 1,100 ரூபாயாக உயர்த்தி விட்டனர். மகளிர் தினம் என்ற பெயரில் விலைக்குறிப்பு எனும் நாடகமாடுகிறது பாஜக. கொஞ்சம் அசந்தால் முதியவர்கள் தினம் என்று கொண்டாடி வெற்றிலை பாக்கு இலவசம் என்று வாக்குறுதி அளிப்பார்கள். அசந்த நேரத்தில் சுருக்கு பையில் இருக்கும் பணத்தை சுரண்டக் கூடியவர்கள் பாஜகவினர். பல்வேறு இடங்களில் வாக்குகேட்டு வரும் பாஜகவினரிடம் வங்கியில் 15 லட்சம் போடுவீர்கள் என்று சொன்னீர்களே என்ன ஆனது? என வாக்காளர்கள் கேட்பதை காணமுடிகிறது” என்று தெரிவித்தார்.