பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் மரண தண்டனை : தமாகா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஜி.கே.வாசன்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமாகா சார்பில் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடந்தது.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டார். அதனை தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், பொது செயலாளர்கள் விடியல் சேகர், முனவர் பாட்சா, ராஜம் எம்பி நாதன், சக்தி வடிவேல், மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பெற்று கொண்டனர்.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ஜி.கே.வாசன் பேசியதாவது: மழை வெள்ளக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் நீரை சேமித்து, தடுத்து பாசனத்திற்கு பயன்படுத்தும் தேசிய அளவிலான நதிகளை இணைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு தமாகா துணை நிற்கும். நமது மாநிலத்தில் ஓடும் நதிகளை இணைத்திடவும் தமாகா குரல் கொடுக்கும். மேலும் காவிரி மற்றும் பாலாற்றில் மழை வெள்ள காலங்களில் பல டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதை தடுத்து தடுப்பணைகள் கட்டி மழை வெள்ள நீரை முறையாக பயன்படுத்த தமாகா குரல் கொடுக்கும்.

சமீப காலங்களில் பாலியல் குற்றங்கள் குறிப்பாக குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். இதனை சட்டவடிவமாக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமாகா உறுதியாக துணை நிற்கும் உள்ளிட்ட 23 அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன என்று கூறினார்.