காங்கிரஸ் கட்சியிடம் ரூ. 1745 கோடி வரி கோரி, வருமான வரித்துறையின் புதிய நோட்டீஸ் வந்துள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக இதுவரை ரூ. 3567 கோடிக்கு வருமான வரித்துறை நெருக்கடியை காங்கிரஸ் எதிர்கொண்டுள்ளது.
ரூ. 1745 கோடி வரி தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை புதிய நோட்டீஸ் விடுத்துள்ளது. ரூ.1823 கோடிக்கு வரி கோரி காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பட்ட சில தினங்களில் இந்த புதிய நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி அறிவிப்புகள் 2014-15 மற்றும் 2016-17 நிதியாண்டுகளுக்கானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் ஒட்டுமொத்தமாக, வருமான வரித்துறை அலுவலகம் இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு ரூ.3,567 கோடியை வரியாகக் கேட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கான வரி விலக்குகளை முடிவுக்கு கொண்டு வந்த பிறகு, மொத்த வசூல் மீதும் வரி தேவை கணக்கிடப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முந்தைய ஆண்டுகளுக்கான வரிக் கோரிக்கைக்காக கட்சியின் கணக்குகளில் இருந்து ரூ.135 கோடியை வரி அதிகாரிகள் ஏற்கனவே திரும்பப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பதிலடியாக காங்கிரஸ் பொருளாளர் அஜய் மக்கன், பாஜகவும் குறிப்பிடத்தக்க வரி விதிப்பு மீறல்களைச் செய்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வருமான வரித்துறையின் அதே அளவுகோல்களைப் பயன்படுத்தி பார்த்தால், பாஜக ரூ.4600 கோடி வரி செலுத்த வேண்டியிருப்பதாக அவர் விளக்கமளித்தார். “எங்கள் மீறல்களை பகுப்பாய்வு செய்ய அவர்கள் பயன்படுத்திய அதே கணக்குகளைப் பயன்படுத்தி பாஜகவின் அனைத்து மீறல்களையும் நாங்கள் பகுப்பாய்வு செய்துள்ளோம். அதன்படி பாஜகவுக்கு ரூ.4600 கோடி அபராதம் வருகிறது. இந்தத் தொகையை செலுத்துமாறு பாஜகவிடம் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப வேண்டும்” என்று அஜய் மாக்கன் கூறினார்.
காங்கிரஸ் மற்றும் அதனை ஒத்த எதிர்க்கட்சிகளை வருமான வரித்துறையால் தொடர்ந்து குறிவைக்கப்படுவதாக அஜய் மக்கான் குற்றம் சாட்டினார். இதையே ’வரி பயங்கரவாதம்’ என்றும் பாஜகவை காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்ட ஆரம்பித்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக தங்கள் கட்சியை முடமாக்க பாஜக அரசு விரும்புவதாகவும் காங்கிரஸ் மேலும் குற்றம்சாட்டுகிறது.