“வெற்றி வாய்ப்பு உறுதி” தூத்துக்குடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த கனிமொழி நம்பிக்கை

தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழக முதல்வரின் திட்டங்கள், திமுகவின் கொள்கைகள், தூத்துக்குடியில் உள்ள திமுகவின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களின் உழைப்பு, எனக்கு இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.

முன்னதாக கலைஞர் அரங்கத்தில் இருந்து புறப்பட்ட அவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கனிமொழி வந்தார். அவருடன், இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் பலரும் வந்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கனிமொழி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர் கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தூத்துக்குடியில், இன்று காலை மக்களைச் சந்தித்து தமிழக முதல்வர் வாக்கு சேகரிக்க வந்தபோது, மக்கள் அவரை ஆர்வத்துடன் உற்சாகத்துடன் வரவேற்றனர். மேலும், நிச்சயமாக இந்தியா கூட்டணி, திமுக வெற்றி பெறும் என்று உறுதி அளித்தார்கள்.

தமிழக முதல்வரின் திட்டங்கள், திமுகவின் கொள்கைகள், தூத்துக்குடியில் உள்ள திமுகவின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களின் உழைப்பு, தூத்துக்குடி மேயர் இந்த பகுதிகளுக்கு செய்து தந்திருக்கக் கூடிய திட்டங்கள் அத்தனையும், நிச்சயமாக எனக்கு இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.