தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலுக்குள் தாமரை சின்னம் பொறித்த துண்டுடன் வாக்கு சேகரிக்க சென்ற சம்பவம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
மத்திய இணை அமைச்சரும், நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று தனது பிரசாரத்தை துவக்கினார். இதன் ஒரு பகுதியாக நீலகிரி மக்களவை தொகுதிக்குட்பட்ட, அவிநாசி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலுக்கு அவர் இன்று வருகை தந்தார். கோயிலில் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு, பின்னர் அவர் அங்கு சாமி தரிசனம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து கோயிலில் இருந்த பொதுமக்களிடம் அவர் வாக்குகள் சேகரித்தார்.
பின்னர் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அவிநாசியை சேர்ந்த சமூக ஆர்வலர்களைச் சந்தித்து அவர்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், ”மத்திய அரசின் பத்தாண்டு கால சாதனைகளையும், மாநில அரசின் மூன்றாண்டு கால ஊழல் அவலங்களையும் மக்களிடம் கொண்டு சென்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன்.
நீலகிரி தொகுதி மக்கள் திமுக வேட்பாளரைக் கண்டு வெட்கி தலை குனிகிறார்கள். 2ஜி வழக்கில் குற்றப்பின்னணி உடையவர் திமுக வேட்பாளர். சனாதனம் குறித்து அவதூறாக பேசும் வேட்பாளரை பெற்றதால் அவர்கள் வெட்கி தலை குனிகிறார்கள். பாஜகவிற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது ” என்றார்.
மேலும், “நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் 2ஜி வழக்கை மீண்டும் சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது. இது அவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி தொகுதியை பொருத்தவரை மோடி ஜியா, 2ஜியா என்ற போட்டி தான் நிலவுகிறது” என்றார்.
இதனிடையே எல்.முருகன் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த போது, தாமரை சின்னம் பொறித்த துண்டைத் தனது தோளில் அணிந்து இருந்தார். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிஙயள்ளனர். வழிபாட்டு தளங்களை தேர்தல் பிரச்சார இடமாக பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலருக்கு புகார் அளிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.