கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யா போட்டியிடுகிறார்.
கிருஷ்ணகிரியில் வசித்து வருபவர் வீரப்பன் மகள் வித்யா வீரப்பன். இவர் பாஜகவில் மாநில ஒபிசி அணியின் துணை தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு நாம் தமிழர் கட்சியின், மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. அதில், கிருஷ்ணகிரி தொகுதி பட்டியலில் வித்யாவின் படம் இடம் பெற்றது.
மேலும், நாம் தமிழர் கட்சி சீமான் பொதுக்கூட்ட மேடையில் அவரை அறிமுகப்படுத்தி, கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வித்யா வீரப்பன் எனவும், இவரது தந்தை காட்டை ஆண்டார். அவரது மகள் நாட்டை ஆளப்போகிறார் என்றார்.
பாஜகவில் இருந்தபடியே நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக வித்யா வீரப்பன் அறிவித்துள்ளது குறித்து கிருஷ்ணகிரி பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் சிவபிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: பாமகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த சிலர், வித்யா வீரப்பனை கட்சிக்கு அழைத்து வந்தனர். அவருக்கு மாநில அளவில் ஒபிசி பிரிவில் துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது.
மேலும், பென்னாகரம் சட்டப்பேரவை தேர்தலில் அங்கே பொறுப்பாளராக தேர்தல் வேலை செய்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே பாஜகவின் எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை. நான் பாஜக மாவட்ட தலைவராக பொறுப்பேற்ற பின் ஒரு முறை தான் அவரை பார்த்துள்ளேன். ஆனால் நிகழ்ச்சிகளுக்கு அவருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது. கிருஷ்ணகிரியில் எங்கள் கட்சி தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் நடைபயணத்திற்கு அழைப்பு விடுத்தும் அவர் கலந்து கொள்ளவில்லை. தற்போது அவர் நாம் தமிழர் கட்சியில் இணைந்து போட்டியிடுவதால், எங்களுக்கு எவ்வித பாதிப்பை ஏற்படுத்தாது.