அதிமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அத்தொகுதியில் போட்டியிட மறைந்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் இன்று காலை விருப்ப மனு தாக்கல் செய்தார். இதனால் அக்கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக தான் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டது. அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெறுள்ள தேமுதிகவுக்கு விருதுநகர் உள்பட 5 தொகுதிகள் ஒதுக்கப்படுள்ளன. இவற்றில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட மறைந்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் இன்று காலை விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு அக்கட்சியினருக்கு ஆதரவு வாக்கு அதிகம் கிடைக்கும் என்பதாலும், விஜயகாந்த்தின் சொந்த ஊரான அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரம் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குள் வருவதாலும், விருதுநகர் தொகுதியை தேமுதிக தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருமங்கலம், திருப்பங்குன்றம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர், அமமுக வேட்பாளர் பரமசிவ அய்யப்பன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருள்மொழிதேவன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முனியசாமி உள்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதில் 4,70,883 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர் வெற்றி பெற்றார். அவரை அடுத்து 3,16,329 வாக்குகள் பெற்று தேமுதிக வேட்பார் அழகர்சாமி 2-ம் இடத்தைப் பெற்றார். இந்நிலையில், நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் இம்முறை அதிமுகவுடன் கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரனை களமிறக்கினால் உறுதியாக வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தில் அவரை வேட்பாளராக அறிவித்து போட்டியிடச் செய்ய வேண்டும் என மதுரையிலும், சிவகாசியிலும் நடந்த தேமுதிக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதோடு, தொகுதி நிலவரம், வாக்காளர்கள் எண்ணிக்கை, சாதிரீதியான வாக்கு வித்தியாசம் குறித்தும், பொதுமக்களின் அடிப்படை தேவைகள், நீண்டநாள் கோரிக்கைகள் குறித்தும் தகவல்களைத் திரட்டிய தேமுதிக நிர்வாகிகள், விருதுநகர் தொகுதியில் தேமுதிக போட்டியிடுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துவிட்டதாகக் கூறுகின்றனர்.
இத்தகைய சூழலில் அதிமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட விஜய பிரபாகரன் இன்று காலை விருப்ப மனு தாக்கல் செய்தார். இதனால் விருதுநகர் மக்களவைத் தொகுதிகள் அதிமுக கூட்டணிகள் தேமுதிக வேட்பாளராக விஜய பிரபாகரன் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.