பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரச்சாரத்துக்கு அரசு நிதியை பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ள திரிணமூல் காங்கிரஸ், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
இது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான டெரெக் ஓ பிரையன், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எழுதியுள்ள புகார் கடிதத்தில், “மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பை கடந்த 16-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன் பிறகு, வாக்காளர்களுக்கான பிரதமர் மோடியின் கடிதம் பிரதமர் அலுவலகம் வாயிலாக வெளியிடப்பட்டது. வேண்டுமென்றே அந்தக் கடிதத்தில் மார்ச் 15 என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
வாக்காளர்களுக்கான மோடியின் கடிதம் பிரதமர் அலுவலகம் வாயிலாக மக்களிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்காக அரசுப் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறிய செயல் இது.
எனவே, இனி இது போன்று அரசு செலவில் பிரச்சாரம் செய்யக் கூடாது என பாஜகவுக்கும் அதன் வேட்பாளர் மோடிக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும். அதோடு, பிரதமர் அலுவலகம் வெளியிட்ட கடிதம் திரும்பப் பெறப்பட வேண்டும். இதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். அதோடு, பிரதமர் அலுவலகம் மூலமாக அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்துக்கு ஆன செலவை நரேந்திர மோடியின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், பிரதமர் அலுவலகம் எந்த ஒரு தேர்தல் நடத்தை விதியையும் மீறவில்லை என்று பாஜக தெரிவித்துள்ளது. டெரெக் ஓ பிரையனின் கடிதம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளரும் மாநிலங்களவை எம்பியுமான சமிக் பட்டாச்சார்யா, “அந்த குறிப்பிட்ட நபர் (டெரெக் ஓ பிரையன்) தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்த கருத்தை வெளியிட்டு வருகிறார்.
அவர் வேண்டுமானால், தேர்தல் ஆணையத்துக்குச் செல்லட்டும்; உச்ச நீதிமன்றத்தை நாடட்டும். உண்மையற்ற அந்தக் குற்றச்சாட்டைக் கொண்டு அவரது கட்சி மேற்கு வங்கத்தில் மக்களின் மனங்களை வெல்ல முடியாது. தனது நல்லாட்சி மூலமாகவும், மக்கள் ஆதரவு கொள்கைகள் மூலமாகவும் பிரதமர் மோடி மக்களின் மனங்களை வென்றுள்ளார். திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களுக்கு மக்களின் இதயங்களில் எந்த இடமும் இல்லை என்பதை தேர்தலுக்குப் பிறகு அவர்கள் தெரிந்து கொள்வார்கள்” என்று கூறினார்.