தேர்தல் பத்திரங்கள் குறித்த புதிய தகவல்களை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, எஸ்பிஐ வங்கி 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15 வரையில் வழங்கப்பட்ட தேர்தல் பத்திர விவரங்களை கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இந்த விவரங்களை மார்ச் 15-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஒருநாள் முன்னதாகவே, தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திர விவரங்களை அதன் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
ஆனால் முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வழங்கவில்லை. தேர்தல் பத்திரங்களை வாங்கியது யார்? எந்த தேதியில் வாங்கினார்கள்? எவ்வளவு தொகை கொடுத்து வாங்கினார்கள்? எந்த அரசியல் கட்சி எந்த தேதியில் குறிப்பிட்ட தேர்தல் பத்திரங்களை பணமாக மாற்றிக் கொண்டது என்ற விவரங்களை வழங்க வேண்டும் மீண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி எஸ்பிஐ வங்கி வழங்கிய புதிய விவரங்களை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
புதிய தகவல்களில் எந்தெந்த நிறுவனங்கள் எந்தெந்த கட்சிகளிடம் இருந்து நிதி பெற்றன என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் ரூ.509 கோடியை தமிழகத்தின் ஆளும்கட்சியான திமுகவுக்கு தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாக அளித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் அதிக அளவில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனமாக உள்ளது. லாட்டரி மார்ட்டின் நிர்வாக இயக்குனராக உள்ள ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிஆர் நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு அதிக நன்கொடை வழங்கியுள்ளது. ரூ.1,368 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக அளித்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுக மொத்தமாக ரூ.656.5 கோடி பெற்றுள்ள நிலையில் லாட்டரி மார்ட்டின் நிறுவனம் மட்டும் ரூ.509 கோடியை வழங்கியுள்ளது.
இதேபோல் அதிமுக தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.6 கோடி பெற்றுள்ளது. இவற்றில் ரூ.4 கோடியை சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனம் அளித்துள்ளது புதிய விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் நிதி அளித்தபோது அதிமுகவின் பொருளாளராக ஓபிஎஸ் இருந்துள்ளார். இதுதவிர கோயம்புத்தூர் தலைமையிடமாக கொண்ட லக்ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் என்ற நிறுவனமும் தேர்தல் பத்திரம் மூலமாக ரூ.1 கோடியை அதிமுகவுக்கு நிதியாக அளித்துள்ளது. சென்னையை சேர்ந்த கோபால் ஸ்ரீனிவாசன் என்பவர் அதிமுகவுக்கு ரூ.5 லட்சத்தை தேர்தல் பத்திரம் மூலம் நிதியாக அளித்துள்ளார்.