கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை நாளை (திங்கள்கிழமை) காலை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தை தற்போது அக்கட்சியினர் நாடியுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டதால், வரும் 20ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கவுள்ளதை குறிப்பிட்டு வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு விரைந்து விசாரிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
அவசர வழக்காக இன்று அல்லது நாளைக்குள் வழக்கை விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதிய நிலையில், கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை நாளை காலை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.