மோடி தலைமையிலான மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து அனைத்துத் தொழிற்சங்கம் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 660 பெண்கள் உட்பட 872 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொழிலாளர் சட்டத் தொகுப்பு நான்கையும் கைவிட வேண்டும். மின்சார திருத்தச் சட்டம் 2020-ஐ திரும்பப் பெற வெண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக் கூடாது. வருமானவரி செலுத்த முடியாக அளவுக்கு வருவாய் இல்லாத குடும்பங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும். மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும்.
மாநில தொழிலாளர் நல வாரியங்களை சீர்குழைக்காதே. அங்கன்வாடி, சத்துணவுத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமும், சமூகப் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத் தொழிற் சங்கத்தினர் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு தொமுச மாவட்டச் செயலாளர் கி.கணபதி, ஐக்கிய விவசாயிகள் முன்னணயின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.மாதவன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிஐடியு மாநில செயலாளர் ஏ.ஸ்ரீதர், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ப.ஜீவானந்தம், ஐக்கிய விவசாயிகள் முன்னணி துணை ஒருங்கிணைப்பாளர் ஏ.ராமையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொமுச மாவட்டத் தலைவர் அ.ரெத்தினம், தொமுச போக்குவரத்து மண்டலச் செயலாளர் எம்.வேலுச்சாமி, சிஐடியு மாநில செயலளார் எஸ்.தேவமணி, விதொச மாநில செயலாளர் எஸ்.சங்கர், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், ஏஐடியுசி மாவட்ட துணைத் தலைவர் கே.ஆர்.தர்மராஜன் மற்றும் நிர்வாகிகள் க.சுந்தர்ராஜன், கே.சண்முகம், எஸ்.சிவராஜ், விஜயலெட்சுமி, செல்வி, மணிமாறன், சித்தையன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இதில், 660 பெண்கள் உட்பட 872 பேரை போலீசார் கைது செய்தனர்.