புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நாய்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளையும், நடந்து செல்லும் பொதுமக்களையும் துரத்தி துரத்தி கடிக்கின்றன. கறம்பக்குடி அம்புக்கோவில் முக்கம், சீனிகடை முக்கம் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. புதன்கிழமை இரவு அந்த பகுதியில் சுற்றித்திரிந்த நாய்க்கு திடீரென வெறி பிடித்தது. சாலையில் நடந்து செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்க தொடங்கியது. ஒருவரை அடுத்து ஒருவரை விடாமல் துரத்திச்சென்று கடித்தது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். சிலர் நாயை அங்கிருந்து விரட்ட முயன்றனர். அவர்களையும் அந்த நாய் விடாமல் கடித்து குதறியது. இதில் கறம்பக்குடி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பார்த்திபன், புதுப்பட்டி சரவணகுமார், தட்டா ஊரணி கௌரி, கரம்பக்காடு ஓமவயல் சூரியமூர்த்தி, வெட்டன் விடுதி வினோத்குமார், புதுப்பட்டி மாரிமுத்து, ஆலங்குடி லோகநாதன், தென்னகர் கோனார்தெரு அம்பிகா, சுக்ரன்விடுதி சுரேஷ்குமார், தென்னகர் சின்னையன் உட்பட 17-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் அருகில் உள்ள கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனா். இதில் 13 போ் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை கறம்பக்குடி நகர் பகுதியில் சுற்றி திரிந்த தெருநாய்களை பிடிக்கும் பணி தொடங்கியது. முழுமையாக நெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.