நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்.10-ம் தேதி வரை ஒருநாள் நீடிக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் ஜன.31-ம் தேதி தொடங்கி பிப்.9-ம் தேதி நிறைவடைவாதாக இருந்த நிலையில், அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, காங்கிரஸை வீழ்த்தி பாஜக ஆட்சிக்கு வந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பும் ஆட்சிக்கு வந்த பின்புமான இந்திய பொருளாதாரத்தை ஒப்பிட்டு வெள்ளை அறிக்கையை அரசு தாக்கல் செய்யும் என்று தெரிவித்தார்.
“மோடி தலைமையிலான அரசு அடிக்கடி குற்றம்சாட்டி வரும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) அரசு ஆட்சியை விட்டு வெளியேறியபோது இந்தியாவின் பொருளாதாரம் எவ்வாறு மோசமாக இருந்தது. இந்த அரசு எப்படி அதில் திருப்பத்தை ஏற்படுத்தியது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்வார். அவர் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிப்ரவரி 1-ம் தேதி, 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது அவர், காங்கிரஸின் 10 ஆண்டு கால ஆட்சியையும், பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் 10 ஆண்டு கால ஆட்சியையும் ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் திட்டமிடப்பட்ட நிதி மசோதா, பட்ஜெட் மீதான விவாதம், மானிய கோரிக்கை விவாதம் இன்னும் நடக்காத நிலையில், வெள்ளை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட வேண்டி இருப்பதால் கூட்டத் தொடரை ஒருநாள் நீட்டிக்க வேண்டிய தேவை எழுந்தது. இதனையடுத்து, நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்.10-ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.