பாலியல் துன்புறுத்தல் : திமுக கவுன்சிலர் மீது பெண் தூய்மை பணியாளர் போலீஸில் புகார்

வீட்டில் வேலை செய்யும்போது திமுக கவுன்சிலர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக பெண் தூய்மை பணியாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த 50 வயது பெண் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், ‘‘சென்னை மாநகராட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணி புரிந்து வருகிறேன். சென்னை மாநகராட்சி 38-வது வார்டு திமுக கவுன்சிலரான நேதாஜி கணேஷ், அவரது வீட்டிலும், அலுவலகத்திலும் பணி செய்ய சொல்லி என்னை வற்புறுத்தி வந்தார். இதனால், நான் அவரது வீட்டிலும், அலுவலகத்திலும் வேலை பார்த்தேன். கடந்த மார்ச் மாதம் அவரது வீட்டில் வேலை செய்யும் போது, பாலியல் ரீதியாக என்னை அவர் துன்புறுத்தினார். இதை நான் கண்டித்தேன்.

கோபத்தில், கடந்த செப்டம்பர் மாதம் பணியில் இருந்து அவர் என்னை நீக்கினார். இதுதொடர்பாக, நான் தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். 4 மாதங்களாகியும் போலீஸார் என் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கவுன்சிலர் நேதாஜி கணேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் குறித்து திமுக கவுன்சிலர் நேதாஜி கணேஷ், ‘‘அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக என் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்’’ என தெரிவித்துள்ளார். காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் தூய்மை பணியாளர் அளித்த புகார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.