‘கேரளாவுடனான பந்தம் ஆயுளுக்கும் இருக்கும்’ : விடைபெறும் ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் உருக்கம் 

கேளர ஆளுநராக தனது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், இன்று மாநிலத்தைவிட்டு வெளியேறிய ஆரிஃப் முகம்மது கான், “எனது இதயத்தில் கேரளா சிறப்பான இடத்தினைப் பெற்றிருக்கும். மாநிலத்துடனான பந்தம் ஆயுளுக்கும் இருக்கும்” என்று தெரிவித்தார்.

மேலும் மாநில மக்கள் தனக்கு அளித்த அன்பு, ஆதரவு மற்றும் அரவணைப்புக்கு நன்றி உடையவனாக இருக்கிறேன். மாநிலத்துக்கு எனது வாழ்த்துகள் என்றும் கூறினார்.

மாநிலத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக திருவனந்தபுரத்தில் ஆரிஃப் கான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “எனது பதவி காலம் முடிவடைந்து விட்டது. ஆனால் கேரளா இப்போது எனது மனதில் சிறப்பான இடத்தினைப் பிடித்துள்ளது. கேரளாவுடனான எனது உணர்வுகள், பந்தத்துக்கு முடிவு கிடையாது. அது எனது ஆயுளுக்கும் தொடரும்.” என்றார்.

பல்கலை துணைவேந்தர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் மாநிலத்தில் ஆளும் இடது முன்னணி அரசுடனான முரண்பாடுகள் குறித்து நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த கான், “அந்தக் கால கட்டத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. மாநில சட்டப்பேரவையால் பல்கலை.யின் வேந்தராக ஆளுநருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தையே நான் செயல்படுத்தினேன். வேறு பிரச்சினைகளிலும், எந்த முரண்பாடுகளும் இல்லை. கேரள அரசுக்கு எனது வாழ்த்துக்கள். அரசு மக்களின் நலனுக்காக பாடுபடும் என்று நான் நம்புகிறேன்.” என்றார்.

பதவிக் காலம் நிறைவடைந்து செல்லும் ஆளுநருக்கு மாநில அரசு முறையான வழியனுப்பு விழா நடத்தவில்லையே என்ற கேள்விக்கு, “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு நாடு முழுவதும் துக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அது போன்ற வழியனுப்பு விழா நடத்துவதற்கு இது சரியான நேரம் இல்லை” என்றார். மேலும்,“பதவியை நிறைவு செய்து கிளம்பும்போது அனைவரையும் பற்றி நல்லவிதமாக செல்லவே விரும்புகிறேன்” என்றார்.

சமீபத்தில் மணிப்பூர், மிசோரம், கேரளா மற்றும் பிஹார் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இனி வரும் நாட்களில் ஆரிஃப் கான் பிஹார் மாநிலத்தின் ஆளுநராக செயல்படுவார். கேரளாவின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பணியாற்றுவார்.

ஆரிஃப் முகம்மது கான் பதவியில் இருந்த போது பல்வேறு பிரச்சினைகளில் மாநிலத்தில் ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான சிபிஐ (எம்) அரசுடன் அவர் முரண்பட்டு வந்தார். இதனிடையே, புதிய ஆளுநர் அரசியலமைப்பு ரீதியாகவும் மாநில அரசுடன் இணக்கமாக செயல்படுவார் என்று நம்புவதாக மாநில அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது. மேலும், கான் சங் பரிவாரின் திட்டங்களை அமல்படுத்த அரசியலமைப்புக்கு எதிரான முறையில் செயல்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியது.