அண்ணா பல்கலை., சம்பவம் : திமுக, கூட்டணி கட்சிகளுக்கு புதுச்சேரி உள்துறை அமைச்சர் கண்டனம்

பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலை மாணவிக்கு குரல் கொடுக்கக்கூட திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தயாராக இல்லை என புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தனது மனைவியுடன் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அப்போது மணவாள மாமுனிகள் மடத்தில் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயரை சந்தித்து ஆசி பெற்றார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: “ஆன்மிகம் செழிக்கும் நாடு சிறப்பாக இருக்கும் என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளன. நமது முன்னோர்கள் காட்டிய வழியிலேயே நாமும் பயணித்து, நாமும் நமது நாடும் சிறப்புற வாழ வேண்டும்.

அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விஷயத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்ததோடு நின்றுவிடாமல், அறவழியில் தன்னுடைய போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அவருக்கு அவரே கொடுத்துக் கொண்ட சவுக்கடி அல்ல, இந்த ஆட்சிக்கு கொடுத்துள்ள சவுக்கடி. அண்ணா பல்கலை விவகாரம் தொடர்பாக முதல்வரோ, துணை முதல்வரோ இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காதது வருத்தம் அளிக்க கூடியது.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு குரல் கொடுக்காத திமுக கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் அண்ணாமலை நடத்திய போராட்டத்தை தான் விமர்சிக்கிறார்கள். இதன் மூலம் மக்கள் மீது அவர்கள் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அண்ணா பல்கலை விவகாரத்தில் திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாமகவில் நடப்பது உட்கட்சி பிரச்சிசனை. அதை அவர்களே பேசி சரி செய்து கொள்வார்கள். தவிர்க்க முடியாத காரணங்களால் புதுச்சேரியில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழகத்தை விட விலை குறைவாகவே உள்ளது.” என்றார்.