மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் கட்டுவது தொடர்பாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தேவையற்ற சர்ச்சையை உருவாக்கி வருவதாக ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “டாக்டர் மன்மோகன் சிங் போன்ற ஒரு சிறந்த ஆளுமையின் உடலை தகனம் செய்வது மற்றும் அவருக்கு நினைவிடம் கட்டுவது தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசு தேவையற்ற சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு நாட்டு மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அதன் பிறகு பொதுமக்கள் கொடுத்த அழுத்தத்தினால்தான், பாஜக அரசு எதிர்காலத்தில் அவருக்கு நினைவிடம் கட்டுவதாக அறிவித்துள்ளது.
2010-ம் ஆண்டில், முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் இறந்த பிறகு, பாஜகவின் எந்த கோரிக்கையும் இன்றி, காங்கிரஸ் அரசு, அவரது குடும்பத்தினரிடம் பேசி, ஜெய்ப்பூரில் அவரது இறுதிச் சடங்குகளுக்காக உடனடியாக ஒரு சிறப்பு இடத்தை ஒதுக்கி, அங்கு நினைவிடம் கட்டப்பட்டது. 2012-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் பால் தாக்கரேவின் மரணத்துக்கு பிறகு, காங்கிரஸ் அரசு அவரது இறுதிச் சடங்குகளுக்காக மும்பை சிவாஜி பூங்காவில் ஒரு சிறப்பு இடத்தை ஒதுக்கியது. காங்கிரஸ் அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் மரியாதையுடன் பிரியாவிடை கொடுத்தது. ஆனால், பாஜக மன்மோகன் சிங் விஷயத்தில் இவ்வாறு நடந்து கொள்வது துரதிர்ஷ்டவசமானது” என்றார்.
முன்னதாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்கும் வண்ணம் இடம் ஒதுக்குமாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறு இடம் ஒதுக்குவது, எளிய பின்னணியில் இருந்து உயர்ந்த ஒரு தலைவருக்கு செலுத்தும் மரியாதையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
2013-ல் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, டெல்லியில் விவிஐபி.க்களுக்கு தனியாக நினைவிடங்கள் அமைக்கப்படாது. குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர்கள் போன்ற தேசியத் தலைவர்கள் மறையும்போது அவர்களுக்கு நினைவிடம் அமைக்க ஒரு பொது வளாகம் உருவாக்கப்படும் என்ற முடிவு எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டு, அதன் முடிவுகள் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர்களுக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பாக அறக்கட்டளை உருவாக்கப்பட்டு அதன் முடிவுகளின்படி மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் கட்ட அரசு இடம் ஒதுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.