‘மெட்ரோ ரயில் உள்பட பல திட்டங்கள் தமிழகம் வர காரணமாக இருந்தவர் மன்மோகன் சிங்’ – முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

“இன்றைக்கு மெட்ரோ ரயில் திட்டம் தமிழகத்துக்கு வந்திருக்கிறது என்றால், அதற்கு காரணம் மன்மோகன் சிங் தான். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வந்ததற்கும் அவர் தான் காரணம். அதேபோல், சேது சமுத்திரத் திட்டத்தை கொண்டு வருவதற்கும் அவர் தான் காரணமாக இருந்தார். ஆனால் இடையிலே அத்திட்டம் நின்றுவிட்டது. இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் தமிழகத்துக்கு வருவற்கு அவர் தான் காரணமாக இருந்திருக்கிறார்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். முதல்வர் உடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன், திருச்சி சிவா மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், “பொருளாதார நிபுணர் முன்னாள் இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் இழப்பானது காங்கிரஸ் பேரியக்கத்துக்கு மட்டுமல்ல, இந்திய நாட்டுக்கே மிகப்பெரிய இழப்பாகும். குறிப்பாக தமிழ்நாட்டினுடைய உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்கும், பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தருவதற்கும் துணை நின்றிருக்கிறார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்று சொன்னால், மதுரவாயல் பறக்கும் சாலை திட்டமாக இருந்தாலும், தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கக்கூடிய வகையிலே சாலை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதாக இருந்தாலும் சரி, அதேபோல் 100 நாட்கள் வேலைத்திட்டம் என்கிற ஒரு புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வந்து அறிமுகப்படுத்தியவர் மன்மோகன் சிங்.

எல்லாவற்றையும் தாண்டி, தமிழர்களுடைய பல ஆண்டு கால கனவாக இருந்து வந்த தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை, சோனியா காந்தியின் துணையோடு அறிவித்து நிறைவேற்றித் தந்தவர் அவர். மறைந்த முதல்வர் கருணாநிதியோடு நெருங்கி நட்புணர்வோடு பழகக்கூடியவராக இருந்தவர். அவர் மறைந்துவிட்டார் என்பது வேதனைக்குரிய ஒன்று. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் பேரியக்கத்துக்கும், திமுகவின் சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு மெட்ரோ ரயில் திட்டம் தமிழகத்துக்கு வந்திருக்கிறது என்றால், அதற்கு காரணம் அவர் தான். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வந்ததற்கும் அவர் தான் காரணம். அதேபோல், சேது சமுத்திரத் திட்டத்தை கொண்டு வருவதற்கும் அவர் தான் காரணமாக இருந்தார். ஆனால் இடையிலே அத்திட்டம் நின்றுவிட்டது. இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் தமிழகத்துக்கு வருவற்கு அவர் தான் காரணமாக இருந்திருக்கிறார்.” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

மேலும், முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “இந்தியாவின் தலைசிறந்த மகன்களுள் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்குக்கு எனது இறுதி மரியாதையைச் செலுத்தினேன். வரலாறு அவரை கனிவுடன் நடத்தும் என்பது மட்டுமல்ல, தமது தொலைநோக்கால் ஒரு நாட்டையே மறுசீரமைத்த, தமது பணிவால் கோடிக்கணக்காருக்கு ஊக்கமூட்டிய, அடுத்து வரும் தலைமுறைகளுக்கெல்லாம் தமது வாழ்க்கையால் நம்பிக்கை மற்றும் வளர்ச்சிக்கான கலங்கரை விளக்கமாக விளங்கும் அரிதினும் அரிதான தலைவர்களுள் ஒருவராக வரலாறு அவரது பெயரைப் பொறித்து வைக்கும்” என்று கூறியுள்ளார்.