உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 92. மன்மோகன் சிங் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த மன்மோகன் சிங் வியாழக்கிழமை இரவு 8.06 மணிக்கு உயிரிழந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் 14-வது பிரதமராக பதவி வகித்த மன்மோகன்சிங் கடந்த 1932 செப்.26-ல் மேற்கு பஞ்சாபில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தவர். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் கடந்த 1991-96 நரசிம்மராவ் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராக பதவி வகித்தார். பொருளாதார வல்லுநரான இவர் இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் தொடக்கத்துக்கு வித்திட்டவர். ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும் பதவி வகித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 2004 மே மாதம் முதல் 2014 மே மாதம் வரை என தொடர்ந்து 2 முறை பிரதமராக பதவி வகித்தார்.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாடாளுமன்ற மாநிலங்களவையில் 6 முறை எம்.பி.யாக இருந்தார். அவர் மக்களவைத் தேர்தலில் ஒரே ஒரு முறைதான் போட்டியிட்டிருக்கிறார். டெல்லியில் இருந்து அவர் போட்டியிட்டார்.
முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங், முதன்முதலில் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு 1991-ல் காங்கிரஸ் எம்.பி.,யாக தேர்வானார். அசாம் மாநிலம் சார்பில் அவருக்கு முதல் அரசியல் பதவி கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவர், 1995, 2001, 2007, 2013 மற்றும் 2019 இல் மீண்டும் மாநிலங்களவையின் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடைசியாக ராஜஸ்தான் சார்பில் மாநிலங்களவை எம்.பி.,யானவர் கடந்த ஏப்ரல் 13-ல் ஓய்வு பெற்றார்.
பேரசிரியரான மன்மோகன் சிங்கின் நாடாளுமன்ற வாழ்க்கை மொத்தம் 33 வருடங்களாக இருந்தது. இதனிடையே, மத்தியில் 1998 முதல் 2004 வரை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியில் இருந்தது. அப்போது, நாடாளுமன்ற மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக மன்மோகன்சிங் இருந்தார்.
1999-ல், நடந்த மக்களவை தேர்தலில் அவர் தெற்கு டெல்லி தொகுதியில் மக்களவைக்கு போட்டியிட்டார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அவர் பாஜகவின் விஜய் குமார் மல்ஹோத்ராவிடம் தோல்வியை சந்திக்க வேண்டி இருந்தது. அப்போது, ’தெற்கு டெல்லியை காக்க மன்மோகன்சிங்கை வெற்றி பெற வையுங்கள்’ என காங்கிரஸார் முழக்கம் இட்டனர்.
இந்த தேர்தலில் வென்ற விஜய் குமார் மல்ஹோத்ராவிற்கு 21.51 சதவிகிதமாக 2,61,230 வாக்குகள் கிடைத்தன. இரண்டாவது நிலையில் காங்கிரஸின் மன்மோகனுக்கு 2,31,231 வாக்குகளுடன் 19.04 சதவிகிதம் கிடைத்திருந்தது. இந்த மக்களவை தொகுதியில் போட்டியிட்ட மொத்தம் 12 வேட்பாளர்களில் எட்டு பேர் சுயேச்சைகள் ஆவர். சுமார் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் மன்மோகன் சிங்குக்கு தோல்வி ஏற்பட்டது.
இந்த தேர்தல் பிரச்சாரத்துக்காக காங்கிரஸ் கட்சி தம் வேட்பாளர் மன்மோகன் சிங்குக்காக அப்போது ரூ.20 லட்சம் அளித்திருந்தது. இது போதாது என டெல்லியின் பல செல்வந்தர்களும், தொழிலதிபர்களும் கூடுதல் தொகை நன்கொடையாக மன்மோகனுக்கு அளிக்க முன்வந்தனர்.
ஆனால், நன்கொடை பெறுவதைத் தவறு எனும் கொள்கை கொண்டிருந்த மன்மோகன் சிங், எவரிடமும் அவற்றை பெறவில்லை. தம் கட்சி அளித்த செலவுத் தொகையிலும் ரூ.7 லட்சத்தை மன்மோகன் சிங் அன்று காங்கிரஸிடம் திருப்பி அளித்த வரலாறு உண்டு எனவும் பாராட்டப்படுகிறது.