‘திமுக கூட்டணி நிரந்தர கூட்டணி’ – நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் ஸ்டாலின் பேச்சு

“திமுக கூட்டணி கொள்கை கூட்டணி மட்டுமல்ல 2026 தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறப்போகும் நிரந்தரக் கூட்டணி” என்று நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாள் மற்றும் கட்சி அமைப்பு நூற்றாண்டு தொடக்க விழா இன்று (டிச.26) கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “பொதுவுடைமை இயக்கத்துக்கும் நூற்றாண்டு விழா, நல்லகண்ணுவுக்கும் நூற்றாண்டு விழா. இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் கிடைத்தது இல்லை. நான் இங்கு நல்லகண்ணுவை வாழ்த்த வரவில்லை. அவரிடம் வாழ்த்து பெற வந்திருக்கிறேன்.

அமைதியாக, ஆழமாக, அடக்கமாக சிந்தித்து இயங்கக்கூடியவர் நல்லகண்ணு. எங்களைப் போன்றவர்களுக்கு தொடர்ந்து அவர் வழிகாட்ட வேண்டும். சமூக நீதியை நிலைநாட்டும் திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றும் திட்டங்களுக்கு உறுதுணையாக விளங்கிக் கொண்டிருப்பவர் நல்லகண்ணு.” என்று நல்லகண்ணுவுக்கு புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், ”தமிழகத்தில் அமைந்துள்ள மதச்சார்பற்ற கூட்டணி கொள்கைக் கூட்டணி மட்டுமல்ல நிரந்தரக் கூட்டணி தற்போதைய சூழலில் இக்கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களை மட்டுமல்ல அதையும் தாண்டி வெற்றி பெறும்.” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலினுடன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில், ஸ்ரீவைகுந்தம் என்ற ஊரில், பெரும் விவசாயக் குடும்பத்தில் 1925 டிசம்பர் 26 ஆம் தேதி ராமசாமி – கருப்பாயி தம்பதியருக்கு மூன்றாவது குழந்தையாக பிறந்தவர் நல்லகண்ணு. இவரோடு பிறந்த சகோதரர்களும், சகோதரிகளும் சேர்ந்து பத்து பிள்ளைகள் கொண்ட பெரும் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

ஸ்ரீவைகுந்தத்தில் உள்ள காரனேஷன் உயர்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வி பயின்றவர். இவரது பள்ளி ஆசிரியரான பலவேசம் மூலம் விவேகானந்தர், பாரதி, திரு.வி.க. போன்ற ஆளுமைகளையும், அவர்தம் படைப்புகளின் அறிமுகத்தைப் பெற்றார். அத்துடன் கம்யூனிச சிந்தாந்தத்தையும் பயின்றார். இதன் விளைவாக 1943 ஆம் ஆண்டில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அமைப்பு ரீதியாக செயல்படத் தொடங்கினார். அதில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இன்று வரை இயங்கி வரும் பெருமைக்கு உரியவர்.