சுனாமியால் உயிரிழந்தோரின் 20-ம் ஆண்டு நினைவு தினம் : மெரினாவில் பொதுமக்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி

சுனாமியால் உயிரிழந்தோரின் 20-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் பொதுமக்களுடன் சேர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார்.

கடந்த 2004-ம் ஆண்டு டிச.26-ம் தேதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை காரணமாக 14 நாடுகளைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தமிழகத்திலும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் சுனாமி பாதிப்புக்குள்ளான இடங்களில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

அந்த வகையில் சென்னை மெரினா லூப் சாலையில் தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் சுனாமியால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, பொதுமக்களுடன் மவுன ஊர்வலத்தில் பங்கேற்றார். தொடர்ந்து அவர் உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏற்றியும், கடலில் பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினார்.

இதில் தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் இரா.அன்பழகனார், தமாகா பொதுச்செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் என்.நாராயணன், மீனவர் பேரவை செயலர்கள் நாக்ஸ் பெர்னாண்டோ, ஜெயக்குமார், இளைஞரணித் தலைவர் ரஞ்சித், கொள்கை பரப்பு செயலாளர் சித்தார்த்தன், மகளிரணித் தலைவர் ஜெயந்தி சித்தார்த்தன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். ஏராளமான மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவர் இரா.அன்பழகனார் கூறும்போது, “எங்களுடைய சோகம் இன்னும் தீரவில்லை. உலக வரலாற்றில் வயிற்றுப் பிழைப்புக்காக செல்லும் மீனவன் கொல்லப்படும் நிலை தமிழகத்தில் தான் இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுடைய வாழ்க்கை மேம்படுவதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும்” என்றார்.