‘இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றக் கோருவோம்’ – ஆம் ஆத்மி விதித்த கெடு

“கேஜ்ரிவாலை அவதூறாகப் பேசிய அஜய் மக்கான் மீது 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், காங்கிரஸ் கட்சியை இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேற்றுமாறு கூட்டணியின் பிற கட்சிகளிடம் வலியுறுத்துவோம்” என்று ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜய் மக்கான், “கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஜன் லோக்பால் போராட்டத்தின் மூலம் டெல்லியில் ஆட்சி அமைத்தது. ஆனால், ஜன் லோக்பால் அமைக்க தவறிவிட்டது. பஞ்சாபில் கூட ஜன் லோக்பால் அமைக்கப்படவில்லை. டெலியில் ஒருவேளை துணைநிலை ஆளுநர் முட்டுக்கட்டை போட்டிருந்தால் பஞ்சாபில் அமல்படுத்தியிருக்கலாமே. 10 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த வாக்குறுதியை அவர்களே மறந்துவிட்டார்கள்.

டெல்லியை லண்டனை போல் ஆக்குவோம் என்றார். ஆனால், டெல்லி மாசுபட்ட நகரமாக உருவாகியுள்ளது. நாட்டிலேயே பெரிய மோசடி மன்னன் கேஜ்ரிவால்தான். நடைமுறையிலேயே இல்லாத நலத் திட்டங்கள் குறித்து டெல்லி முதல்வர் மக்களுக்கு தவறான வாக்குறுதிகளை அளிக்கிறார். அதனால்தான் அவர் மீதும், மத்திய பாஜக அரசு மீதும் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளோம். ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தது ஒரு தவறு. அதை சரிசெய்ய வேண்டும். டெல்லியின் அவல நிலைக்கும், காங்கிரஸ் கட்சி டெல்லியில் பலவீனமடைந்ததற்கும், 2013-ல் ஆம் ஆத்மியை 40 நாட்கள் நாங்கள் ஆதரித்ததே காரணம். இது எனது தனிப்பட்ட கருத்து” எனக் கூறியிருந்தார்.

இந்தக் கருத்தால் ஆம் ஆத்மி கட்சியினர் கொந்தளிப்பில் உள்ளனர். இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், “கேஜ்ரிவாலை ஒரு தேச விரோதி என்ற விமர்சித்துள்ள அஜய் மக்கான் மீது காங்கிரஸ் கட்சி 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டாவில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் காங்கிரஸை கூட்டணியிலிருந்து விலக்கி வைக்குமாறு கோருவோம். அஜய் மக்கான், பாஜக எழுதிக் கொடுத்ததை வாசித்துள்ளார்” என்று கூறினார்.

டெல்லி முதல்வர் அதிஷி கூறுகையில், “சந்தீப் தீக்‌ஷித் உட்பட காங்கிரஸ் வேட்பாளர்களின் தேர்தல் செலவைக் கூட ஆம் ஆத்மி கட்சியே செய்தது. காங்கிரஸின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது அவர்கள் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் ஏதோ உள்ளடி வேலையில் ஈடுபட்டிருப்பதுபோல் தெரிகிறது. காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பாஜக தேர்தல் நிதியுதவி செய்வதாக நாங்கள் தெரிந்து கொண்டோம். நாங்கள் தேச விரோதிகள் என்றால் காங்கிரஸ் ஏன் எங்களுடன் இணைந்து மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டது. காங்கிரஸுக்கு உதவி ஆம் ஆத்மியை தோற்கடிக்க பாஜக வியூகம் வகுத்துள்ளதையும் அறிவோம்.” என்றார்.

டெல்லி இளைஞர் காங்கிரஸ் கட்சி துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டுள்ளது. அதில் மஹிளா சம்மன் யோஜனா, சஞ்சீவி யோஜனா ஆகிய இரண்டு திட்டங்களும் அரசால் இன்னும் அறிவிக்கை செய்யப்படவில்லை. அமலிலேயே இல்லாத திட்டங்களை கேஜ்ரிவால் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக டெல்லி அரசின் இரண்டு துறைகளும் இந்த இரு திட்டங்களும் அமலில் இல்லை எனத் தெரிவித்துள்ளது. கேஜ்ரிவாலுக்கு எதிராக அரசு துறையே கூறியுள்ள இந்தக் கருத்து ஆம் ஆத்மிக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.