‘‘நிதி உதவி வழங்க தகவல்களை திரட்டும் அதிகாரம் அரசியல் கட்சிக்கு கிடையாது’’ – ஆம் ஆத்மிக்கு டெல்லி அரசு எதிர்ப்பு

ஆம் ஆத்மியின் நலதிட்ட அறிவிப்புக்கு எதிராக டெல்லி அரசின் குழந்தைகள் மற்றும் பெண்கள் வளர்ச்சித்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. ‘முதல்வரின் பெண்களுக்கான மரியாதை திட்டம்’ (முக்கிய மந்திரி மகிளா சம்மான் யோஜனா) என்ற பெயரில் தகவல்களை சேகரிப்பது மோசடி என்றும், இவ்வாறு தகவல்களை திரட்ட தனிநபர்களுக்கோ, அரசியல் கட்சிக்கோ அதிகாரம் இல்லை என்றும் அது தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டெல்லி அரசுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘முதல்வரின் பெண்களுக்கான மரியாதை திட்டம்’ என்ற பெயரில் டெல்லி பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2,100 வழங்குவதாக ஒரு அரசியல் கட்சி அறிவித்துள்ளதாக ஊடக செய்திகளின் வழியாக அறிந்தோம். டெல்லி அரசால் அத்தகைய திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

அத்தகைய திட்டம் எதுவும் இல்லாததால், இல்லாத அந்த திட்டத்துக்கான படிவங்கள் மற்றும் விண்ணப்பங்களை ஏற்றுகொள்வது பற்றி கேள்வி எழுப்ப முடியாது என்று வலியுறுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மோசடி செய்யப்படுகிறது. ‘முதல்வரின் பெண்களுக்கான மரியாதை திட்டம்’ என்ற பெயரில் தகவல்களை திரட்ட தனிநபர்களுக்கோ, அரசியல் கட்சிக்கோ அதிகாரம் இல்லை” என்று தெரிவித்துள்ளது.

வரும் டெல்லி பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ள இரண்டு நலத்திட்டங்களுக்கான விண்ணப்பதாரர்களை வீடு வீடாக சென்று பதிவுசெய்யும் இயக்கத்தை ஆம் ஆத்மி கட்சி தொடங்கிய மறுநாள் இந்த அறிக்கை வந்துள்ளது. இந்த விவகாரம் டெல்லி அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில், “மகிளா சம்மன் யோஜனா மற்றும் சஞ்சீவினி யோசனா ஆகிய திட்டங்களால் அவர்கள் கலவரமடைந்துள்ளனர். அடுத்த சில நாட்களில் அதிஷியை அவர்கள் போலி வழக்கு போட்டு கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்பு ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களை சோதனைக்கு உட்படுத்துவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பாஜகவும் பதிலடி கொடுத்துள்ளது. அக்கட்சியின் மஞ்சிந்தர் சிங் சிர்சா கூறுகையில், “அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு மோசடியாளர். அவர் விண்ணப்பங்களை நிரப்பிப் பெற்றுக்கொண்டிருக்கும் போது, அவரது அரசுத்துறை (டெல்லி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை) ரூ.2,100 வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. இதற்காக படிவங்களைப் பூர்த்தி செய்து வாங்கும் தனிநபர்கள் சட்டவிரோதமாக தரவுகளை சேகரிக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.