எட்டயபுரம் அருகே கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் திருப்பூரைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அய்யன் தோட்டத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (38). இவரது நண்பர்கள் திருப்பூர் மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த விஜயகுமார் (38), அலங்கியத்தைச் சேர்ந்த விக்னேஷ் (31), பழனி அருகே ஆண்டி நாயக்கர் வலசுவை சேர்ந்த மகேஷ் குமார் (35), பழனி அருகே ராசுகாட்டுத் தோட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35). இவர்கள் 5 பேரும் முருகன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர்.
இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறுபடை கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதற்காக காரில் புறப்பட்டனர். நேற்று காலை சுவாமி மலைக்கு சென்ற அவர்கள், அங்கு தரிசனம் முடித்துவிட்டு தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு சென்றுள்ளனர். பின்னர் தஞ்சாவூரில் இருந்து திருச்செந்தூருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.
காரை செல்வராஜ் ஓட்டி வந்தார். இன்று அதிகாலை ஒரு மணிக்கு மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் மேலக்கரந்தை அருகே வந்தபோது, செல்வராஜிக்கு தூக்கம் வரவே, அவர் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு தண்ணீர் அருந்தி கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் கார் தூக்கி வீசப்பட்டு சாலையோர பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் செல்வராஜ், விஜயகுமார், விக்னேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காயமடைந்த மகேஷ் குமார், ராஜ்குமார் ஆகியோர் சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து எட்டயபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.