தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் தேர்வு நடைமுறையில் குறைபாடு : ராகுல், கார்கே கருத்து

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறை “அடிப்படை குறைபாடு” கொண்டதாகவும், ஒருமித்த கருத்தை எட்டுவதற்குப் பதிலாக ‘முன்பே தீர்மானிக்கப்பட்ட’ முடிவை அமல்படுத்துவதாகவும் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின்(NHRC) தலைவராக இருந்த நீதிபதி (ஓய்வு) அருண் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் ஜூன் 1ம் தேதி முடித்ததில் இருந்து தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக் குழுக் கூட்டம் டிசம்பர் 18ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தலைவர் பதவிக்கு நீதிபதி ரோஹிண்டன் ஃபாலி நாரிமன் மற்றும் நீதிபதி குட்டியில் மேத்யூ ஜோசப் ஆகியோரின் பெயர்களை முன்மொழிந்தார்கள். உறுப்பினர்கள் பதவிக்கு நீதிபதி எஸ். முரளிதர் மற்றும் நீதிபதி அகில் அப்துல்ஹமீத் குரேஷி ஆகியோரின் பெயர்களை அவர்கள் பரிந்துரை செய்தனர்.

எனினும், ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், தேசிய மனித உரிமை ஆணையத்தின் புதிய தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டார். பிரியங்க் கனூங்கோ மற்றும் நீதிபதி (ஓய்வு) பித்யுத் ரஞ்சன் சாரங்கி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இதற்கு மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்முறை ‘அடிப்படை குறைபாடு’ கொண்டதாக உள்ளது. பரஸ்பர ஆலோசனையை புறக்கணிப்பதாகவும், ‘முன்பே தீர்மானிக்கப்பட்ட’ முடிவை செயல்படுத்துவதாகவும் உள்ளது.

இது தேர்வுக் குழுவின் நம்பகத்தன்மைக்கு முக்கியமாக அதன் நேர்மை மற்றும் பாரபட்சமற்ற தன்மையை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது. விவாதத்தை ஊக்குவிப்பதற்கும், ஒரு கூட்டு முடிவை உறுதி செய்வதற்கும் பதிலாக குழுவானது, ஆலோசனைக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட நியாயமான கவலைகளைப் புறக்கணித்து பெயர்களை இறுதி செய்ய, அதன் பெரும்பான்மையை மட்டுமே நம்பியிருந்தது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் என்பது அனைத்து குடிமக்களின், குறிப்பாக ஒடுக்கப்பட்ட பிரிவினரின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் முக்கியமான சட்டப்பூர்வ அமைப்பாக உள்ளது. இந்த ஆணையை நிறைவேற்றுவதற்கான அதன் திறன், அதன் உள்ளடக்கம் மற்றும் பிரதிநிதித்துவத்தை கணிசமாக சார்ந்துள்ளது.

தலைவர் பதவிக்கு நீதிபதி ரோஹிண்டன் ஃபாலி நாரிமன் மற்றும் நீதிபதி குட்டியில் மேத்யூ ஜோசப் ஆகியோரின் பெயர்களை அவர்களின் தகுதி மற்றும் தேவை இரண்டையும் கருத்தில் கொண்டு நாங்கள் முன்மொழிந்தோம். சிறுபான்மை பார்சி சமூகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற நீதிபதியான நீதிபதி ரோஹிண்டன் ஃபாலி நாரிமன், அறிவார்ந்தவர், அரசியலமைப்பு விழுமியங்களில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காகப் புகழ் பெற்றவர். அவரை தலைவராக தேர்ந்தெடுத்திருந்தால் அது இந்தியாவின் பன்மைத்துவ சமுதாயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் NHRC இன் அர்ப்பணிப்பு பற்றிய வலுவான செய்தியை வெளிப்படுத்தி இருக்கும்.

அதேபோன்று, சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான நீதிபதி ஜோசப், தனிமனித சுதந்திரம் மற்றும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் தீர்ப்புகளை தொடர்ந்து அளித்து, இந்த முக்கியமான பதவிக்கு சிறந்த வேட்பாளராக தகுதி பெற்றுள்ளார். மேலும், உறுப்பினர்கள் பதவிக்கு, நீதிபதி எஸ். முரளிதர் மற்றும் நீதிபதி அகில் அப்துல்ஹமீத் குரேஷி ஆகியோரின் பெயர்களை நாங்கள் பரிந்துரை செய்தோம். அவர்கள் இருவரும் மனித உரிமைகளை நிலைநிறுத்துவதில் முன்மாதிரியான சாதனை படைத்தவர்கள்.

நீதியரசர் முரளிதர், காவலர் வன்முறை மற்றும் சிவில் உரிமைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட சமூக நீதியை முன்னேற்றும் அவரது முக்கிய தீர்ப்புகளுக்காக பரவலாக மதிக்கப்படுகிறார். மேலும், முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த நீதிபதி குரேஷி, அரசியலமைப்பு கொள்கைகளை தொடர்ந்து பாதுகாத்து, பொறுப்புக்கூறலுக்கான வலுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

அவர்களைச் சேர்ப்பது NHRC இன் செயல்திறன் மற்றும் பன்முகத்தன்மைக்கான அதன் அர்ப்பணிப்புக்கு பங்களிக்கும். தகுதி மறுக்க முடியாத முதன்மை அளவுகோலாக இருந்தாலும், நாட்டின் பிராந்திய, சாதி, சமூகம் மற்றும் மத பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் சமநிலையை பராமரிப்பது சமமாக முக்கியமானது.

இந்த முக்கியமான கொள்கையை புறக்கணிப்பதன் மூலம், இந்த மதிப்பிற்குரிய நிறுவனத்தில் பொது நம்பிக்கையை கமிட்டி சிதைக்கும் அபாயம் உள்ளது. இந்த பரிசீலனையை, தேர்வுக் குழு நிராகரித்திருப்பது ஆழ்ந்த வருந்தத்தக்கது. அவர்கள் நிராகரிக்கப்பட்டிருப்பது தேர்வு செயல்முறையின் பாரபட்சமற்ற தன்மை மற்றும் நேர்மை பற்றிய குறிப்பிடத்தக்க கவலைகளை எழுப்புகிறது.” என்று தெரிவித்துள்ளனர்.

NHRC சட்டத்தின்படி, NHRC தலைவரை தேர்ந்தெடுக்கும் பிரதமர் தலைமையிலான குழுவில், மக்களவை சபாநாயகர், உள்துறை அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மாநிலங்களவை துணைத் தலைவர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.