தேர்தல் நடத்தை விதிகள் திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு

தேர்தல் நடத்தை விதிகள் 1961-ல் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் 1961-ல் மத்திய அரசு சமீபத்தில் திருத்தங்களை மேற்கொண்டது. இந்த திருத்தங்களுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சில மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் ஆய்வு செய்வதைத் தடுக்கும் வகையில் தேர்தல் விதியை மாற்றியமைத்திருப்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒருமைப்பாட்டை அழிக்கும் மோடி அரசின் திட்டமிட்ட சதியின் ஒரு பகுதி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டி இருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மத்திய அரசின் இந்த தேர்தல் நடத்தை விதி திருத்தத்தை காங்கிரஸ் கட்சி சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய அரசு மேற்கொண்டுள்ள திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஜெயராம் ரமேஷ் வழக்கு தொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “1961 தேர்தல் நடத்தை விதிகளில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறையின் நேர்மை வேகமாக சிதைந்து வருகிறது. அதை மீட்டெடுக்க உச்சநீதிமன்றம் உதவும் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு பொறுப்பான அரசியல் சாசன அமைப்பான தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக, பொது ஆலோசனையின்றி, இதுபோன்ற முக்கிய சட்டத்தை இவ்வளவு வெட்கக்கேடான முறையில் திருத்துவதை அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை, பொதுமக்களின் ஆய்வுக்கு கிடைக்கும் ஆவணங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தை விதிகள் 1961-ன் விதி 93-ல் சில திருத்தங்களை மேற்கொண்டது.

இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு தேர்தல் நடத்தை விதி 93 (2) (ஏ)-வில், ‘தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பொது ஆய்வுக்கு கிடைக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்பு அந்த விதியில், ‘தேர்தல் தொடர்பாக இந்த விதியில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் பொது ஆய்வுக்கு கிடைக்கும்’ என மாற்றப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகளின்படி, வேட்பாளரின் வேட்புமனுக்கள், தேர்தல் முகவர்கள் நியமனம், தேர்தல் முடிவுகள், செலவு கணக்குகள் போன்ற விதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் மட்டுமே பொது ஆய்வுக்கு கிடைக்கும். சிசிடிவி கேமரா, வெப்காஸ்டிங் காட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் வீடியோ பதிவுகள் போன்ற சில மின்னணு ஆவணங்கள் பொது ஆய்வுக்கு இனி கிடைக்காது.