“திமுக அரசிடமிருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்போடுதான் எனது ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்து வருகிறேன். தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமையும், அமைப்பேன்” என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி சென்னை கீழ்ப்பாக்கம் ஹால் சாலையில் உள்ள நேர்ச்சை திருத்தல மாதா தேவாலயத்தில் சசிகலா இன்று சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கருணை இல்லத்தில் முதியவர்கள் உடன் இணைந்து கேக் வெட்டி அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முதியோருக்கு உணவும் பரிமாறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “பணி செய்யும் பெண்களுக்கான தங்கும் விடுதி திட்டத்தை கடந்த 2013-ம் ஆண்டு ஜெயலலிதா செயல்படுத்தினார். திமுக ஆட்சியில் பெயரை மாற்றி ‘தோழி’ என்ற புதிய திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ள ஈரோட்டுக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு மழை நிவாரணம் வழங்கினார். அவருக்கு மக்கள் மீது அக்கறை இருந்தால் பாதிக்கப்பட்ட மற்ற இடங்களிலும் நிவாரணம் வழங்கியிருக்க வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்கள் ஆகியவை முறையாக வழங்கப்படுவதில்லை. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட லேப்டாப், சைக்கிள் ஆகியவை கொடுக்கப்படவில்லை. மாணவர்களுக்கு புத்தகம் கூட வழங்காமல் பழைய புத்தகத்தை வாங்கி படிக்கும் நிலையே தற்போது தமிழகத்தில் உள்ளது. ஆண்டுக்கு 100 நாள் சட்டப்பேரவையை நடத்துவதாக திமுக தெரிவித்தது. ஆனால் 4 ஆண்டுகள் கடந்தும் 134 நாட்கள் மட்டுமே சட்டப்பேரவை நடத்தப்பட்டுள்ளது.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது இல்லை. திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக தமிழக கேரள எல்லையில் பாதுகாப்பு முறையாக மேற்கொள்ளவில்லை அதன் காரணமாக தமிழகத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. விவகாரம் நீதிமன்றம் வர சென்றதால் நடவடிக்கை எடுப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
திமுகவின் கணக்கெல்லாம் தமிழக மக்களிடம் செல்லாது. அதிமுகவின் வாக்கு வங்கி குறையவில்லை. திமுக அரசிடமிருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்போடுதான் எனது ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்து வருகிறேன். தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமையும், அமைப்பேன்” என்று சசிகலா கூறினார்.