உ.பி.,யில் நடந்த என்கவுன்ட்டரில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மூவர் சுட்டுக் கொலை

உ.பி.,யில் இன்று நடந்த என்கவுன்ட்டரில் காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஞ்சாப் போலீஸ், உ.பி. அதிரடி காவல்படையினர் கூட்டாக இணைந்து இந்த என்கவுன்ட்டரை நிகழ்த்தியுள்ளனர். சுட்டு வீழ்த்தப்பட்ட மூவரும் குருதாஸ்பூரில் நடந்த கையெறி குண்டு தாக்குதலில் தொடர்புடையவர்கள் எனத் தெரிகிறது.

இது குறித்து பஞ்சாப் மாநில காவல்துறை டிஜிபி கவுரவ் யாதவ் கூறுகையில், “பிலிபித்தின் புரான்பூர் பகுதியில் இன்று அதிகாலை நடந்த என்கவுன்ட்டரில் காலிஸ்தான் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் குருதாஸ்பூர் தாக்குதலில் தொடர்புடையவர்கள். இந்த என்கவுன்ட்டர் பாகிஸ்தான் ஆதரவு காலிஸ்தான் விடுதலை இயக்கத்துக்கு எதிரான மிக முக்கிய நடவடிக்கை. கொல்லப்பட்டவர்கள் குர்வீந்தர் சிங் (25), வீரேந்திர சிங் என்ற ரவி (23), ஜஸ்ப்ரீத் சிங் என்ற பிரதாப் சிங் (18) ஆவர். இவர்கள் அனைவருமே பஞ்சாப் மாநில குர்தாஸ்பூரைச் சேர்ந்தவர்களாவர்.” என்றார்.

மேலும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பகிர்வில், “உ.பி. அதிரடி காவல் படையினருடன் இணைந்து நடந்தப்பட்ட என்கவுன்ட்டரில் பாகிஸ்தான் ஆதரவு காலிஸ்தான் ஜிந்தாபாத் படையைச் (KZF) சேர்ந்த 3 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இது மிக முக்கியமான நகர்வு. ஒட்டுமொத்த குழுவை பற்றியும் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளோம்.” என்றார்.

இதேபோல் உத்தரப் பிரதேச சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் அமிதாப் யாஷ் கூறுகையில், “என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று பேரும் குருதாஸ்பூர் சோதனைச் சாவடி கையெறி குண்டு தாக்குதலில் தொடர்புடையவர்கள். மூவருக்கும் முதலில் படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக புரான்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தனர். அவர்களிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள் இரண்டு, இரண்டு க்ளாக் பிஸ்டல்கள் மற்றும் நிறைய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.” என்றார்.