புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், மேலூர் வருவாய் கிராமம், வெள்ளிக்குடிப்பட்டி குக்கிராமத்தில் நடைபெற்ற ’‘மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தலைமையில் இன்று மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை பார்வையிட்டு, மக்களிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து, பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
பின்னர், சட்டத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்களின் நலன் காக்கும் வகையில் மக்கள்நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையில், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், திராவிட மாடல் ஆட்சியின் மற்றுமொரு மைல்கல்லாக ‘மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் 18.12.2023 அன்று தொடங்கி வைத்தார்கள்.
அதனைத்தொடர்ந்து, இத்திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் 11.07.2024 அன்று ஊரகப் பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தி தொடங்கி வைத்தார்கள். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 11.07.2024 முதல் 10.09.2024 வரை 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 495 கிராம ஊராட்சிகளில் 66 ‘மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்கள் நடத்தப்பட்டது. அதன்படி, இன்றையதினம் திருமயம் வட்டம், மேலூர் வருவாய் கிராமம், வெள்ளிக்குடிப்பட்டி குக்கிராமத்தில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் நேரில் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான 6 நகல் அட்டைகளும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை பெறுவதற்கான 2 நகல் அட்டைகளும் வழங்கப்பட்டது.
இம்முகாம்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, எரிசக்தித்துறை உள்ளிட்ட பல்வேறு 15 அரசுத் துறைகள் சார்ந்த 44 சேவைகள் வழங்கப்படுகிறது. இம்முகாம்களில் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறைகளால் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் வழங்கப்பட்டு தீர்வு காணப்படுகிறது. எனவே இம்முகாம்களை பொதுமக்கள் அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
பின்னர், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனில் மிகுந்த அக்கறைகொண்டு பல்வேறு மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்றுசேரும் வகையில் ‘மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தின் மூலம் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரக பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் சென்றடையும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இம்முகாமில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, எரிசக்தித்துறை, உள் மதுவிளக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை (கலால்), தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வேளாண்மை – உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட 15 அரசுத் துறைகள் சார்ந்த 44 சேவைகள் வழங்கப்படுகிறது.
எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில், இம்முகாம்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.ஷோபா, ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு (எ) சிதம்பரம், திருமயம் வட்டாட்சியர் புவியரசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆர்.சங்கர், பி.வெங்கடேசன், ஊராட்சிமன்றத் தலைவர் (மேலூர்) ச.லதா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்