நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்திப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும். அவர் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். கட்சியின் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்பி, வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான் மற்றும் தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அமித் ஷாவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தல் வைத்திலிங்கம் எம்பி பேசியதாவது: வரலாற்றில் இருந்து காந்தி, நேருவை மறக்கடித்துவிட்டோம். இன்னும் இருப்பது அம்பேத்கர் மட்டும் தான். அவரையும் ஓரங்கட்டிவிட்டால் நிச்சயம் பழைய வரலாற்றை பேச யாரும் இருக்க மாட்டார்கள் என்பதே பாஜகவின் எண்ணம். அம்பேத்கரின் கொள்கைதான் இன்று இந்தியாவை ஒற்றுமையாக வைத்துள்ளது. அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தை கொண்டு வரவில்லை என்று சொன்னால், பங்களாதேஷ், பர்மா, பாகிஸ்தான், இலங்கை போன்று இந்தியா ஆகியிருக்கும்.
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அம்பேத்கர் எழுதிய சட்டத்தினால்தான் இந்திய நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் இருக்கின்றனர். அவர் எழுதிய அரசியலமைப்பு சட்டம் தான் காப்பாற்றும் என்றும், உச்ச நீதிமன்றத்தை நடத்தும் என்றும், நாடாளுமன்றத்தை நடத்தும் என்றும் மக்கள் நினைக்கின்றனர். ஆனால் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டத்தை சொன்னாலே பாஜகவுக்கு கோபம் வரும். அதுபற்றி பேசமாட்டார்கள்.
நாடாளுமன்றத்தில் அதானி என்ற ஒரு வார்த்தையை சொன்னால் போதும் உடனடியாக நாடாளுமன்றம் தள்ளி வைக்கப்பட்டது என்று கூறிவிட்டு சென்றுவிடுவார்கள். நாடாளுமன்றத்தில் அதானி என்ற பெயரையே பேசக்கூடாது. ஏனென்றால் அவர்களுக்கு கடவுள் அவர்தான்.
அமித் ஷாவுக்கு மோட்சம் கொடுப்பவர் அம்பானி. பிரதமர் மோடிக்கு மோட்சம் கோடுக்க போகின்றவர் அம்பானி. நமெக்கல்லாம் அவர் என்ன? கொடுக்கப்போகிறார் என்றால் நரகத்தை தான். அம்பேத்கரை இழிவாக பேசியதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருத்தமோ, மன்னிப்போ கேட்கவில்லை. நான் சொன்னது சரிதான் என்ற நிலையில் தான் அவர் இருக்கின்றார். இன்றை தினம் இந்திய மக்கள் அனைவரும் விழித்துக்கொண்டனர். காந்தி, நேருவை தூக்கிவிட்டோம், இன்னும் இருப்பது அம்பேத்கர் தான் என்று கூறி சண்டைக்கு அழைக்கின்றனர். அதனை நாம் விடக்கூடாது.
அம்பேத்கர் பட்டியலின மக்களுக்கு மட்டும் பாதுகாப்பானவர் இல்லை. இந்திய நாட்டில் அனைத்து மக்களுக்கும் பாதுகாவலர் அம்பேத்கர் தான். எனவே இந்நேரத்தில் நாம் போராட்டத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று வைத்திலிங்கம் பேசினார்.