ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இன்று காலை நடந்த என்கவுன்ட்டரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்ட்டரின் போது இரண்டு ராணுவ வீரர்களும் காயமடைந்தனர்.
முன்னதாக நேற்று இரவு தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து வந்த தகவலை ஒட்டி பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக சினார் கார்ப்ஸ் படைப்பிரிவு சார்பில் சமூகவலைதளத்தில், “டிசம்பர் 19 ஆம் தேதியன்று இந்திய ராணுவமும், ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் சேர்ந்து குல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அதனை அறிந்து தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்கு பாதுகாப்புப் படை தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முழுவதும் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது. 8 முதல் 10 மாவட்டங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளன. பல்வேறு தீவிரவாத தாக்குதல்களீலும் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 18 பேர் படை வீரர்கள், 14 பேர் பொது மக்கள், 13 பேர் தீவிரவாதிகள் ஆவர்.