அம்பேத்கர் பற்றிய அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகளும், அமித் ஷா கருத்தை எதிர்க்கட்சிகள் திரித்து சர்ச்சையாக்குவதாகக் கூறி பாஜகவும் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் சலசலப்பு நிலவியது.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று திரண்ட பாஜக எம்.பி.க்கள், ‘பாபா சாஹேப் அம்பேத்கர் நமக்கு வழிகாட்டினார். ஆனால் காங்கிரஸ் தவறான பாதையில் இட்டுச்சென்றது’ என்ற பதாகைகளை ஏந்தியபடி காங்கிரஸை குற்றஞ்சாட்டினர். ஊடகங்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், “காங்கிரஸ் குடும்பத்தினர் தங்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கிக் கொண்டனர். ஆனால் பாபா சாஹேப் அம்ப்தேகருக்கு அவர்கள் வழங்கவில்லை. அதன்மூலம் பாவம் செய்தனர். அந்தப் பாவத்தைப் போக்க அவர்கள் ஒரு நாள் மவுன விரதம் இருக்க வேண்டும்.
அமித் ஷா பேச்சை காங்கிரஸ் திரித்துப் பேசுகிறது. அம்பேத்கருக்கு பாரத் ரத்னா விருது வழங்கியது பாஜக அரசு தான். அமித் ஷா பேச்சை அரசியலாக்கி அதன்மூலம் தனக்கு பிரபல்யத்தைத் தேடிக் கொள்ள காங்கிரஸ் முயற்சிக்கிறது” என்றார். போராட்டத்தின் போது பாஜக எம்பி பிரதாப் சாரங்கி காயமடைந்துள்ளார். நாடாளுமன்றத்துக்கு வந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஒரு எம்.பி.யை தள்ளிவிட அவர் தன் மீது விழுந்ததால் தனக்கு காயம் ஏற்பட்டதாக சாரங்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்று அமித் ஷாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
மேலும் அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழ்நாடு முழுக்கவும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இதேபோல் விசிகவினர் ஆங்காங்கே ரயில் மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர்.
அம்பேத்கரை இழிவு படுத்திய அமித்ஷாவை உள்துறை அமைச்சர் பொறுப்பில் ஒரு வினாடியும் நீடிக்க தகுதியற்றவர். அவரை அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட, மாநகர, நகர, பேரூர் மற்றும் ஒன்றியத் தலைநகர்களில் நாளை ஆர்பாட்டத்தில் ஈடுபடும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிவித்துள்ளார்.