மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 2 கோடியாவது பயனாளிக்கு ஈரோடு மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை மருந்து பெட்டகம் வழங்கவிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று சென்னை, சைதாப்பேட்டை, வாழைத்தோப்பு பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் நடைபெறும் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது: கடந்த கால ஆட்சியில் தரமற்ற மருந்துகள் இருந்ததும், 30% மருத்துவப் பணியாளர்கள் காலிப்பணியிடம் இருந்ததால் மருத்துவ சேவையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் CAG அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துறை உயர் அலுவலர்களுடன் இதுசம்பந்தமாக கலந்து பேசியிருக்கிறேன்.
CAG அறிக்கையில் என்னவெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறதோ, கடந்த கால ஆட்சியில் எந்தமாதிரியான குற்றங்கள் சொல்லப்பட்டிருக்கிறதோ, அக்குறைகள் தொடர்பாக ஆய்வு நடத்தி அது சம்பந்தமாக துறை ரீதியான நடவடிக்கைகளுக்கோ, சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கோ துறையின் சார்பில் பரிந்துரை செய்ய உள்ளோம். அடுத்த வாரம் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு கடந்த கால ஆட்சியில் CAG அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மேல்நடவடிக்கை தொடர்பாக அரசுக்கு பரிந்து செய்ய உள்ளோம்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2021 ஆகஸ்ட் 5 ஆம் தேதி தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது அவர், முதல் பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை தருகிறேன், ஒரு கோடியாவது பயனாளிக்கும் மருந்து பெட்டகத்தை தருகின்ற நிகழ்வு தமிழ்நாட்டில் நடைபெற வேண்டும் என்று சொன்னார். சொன்னது மட்டுமல்ல 50 லட்சமாவது பயனாளிக்கு அவரே வந்து மருந்து பெட்டகத்தை தந்தார், ஒரு கோடியே ஓராவது பயனாளிக்கும் அவரே வந்து மருந்து பெட்டகத்தை தந்தார்.
கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் தொற்றா நோய்களுக்காக உலகிலேயே சிறப்பாக செயல்பட்டமைக்கு தமிழ்நாட்டினை தேர்ந்தெடுத்து ஐ.நா சபை விருது வழங்கினார்கள். இந்த நிலையில் நாளை முதல்வர் ஸ்டாலின் ஈரோட்டில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் 2 கோடியாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்க உள்ளார். முதல்வரின் லட்சியம் ஒரு கோடி பயனாளி இருக்க வேண்டும் என்பது தற்போது அது இரட்டிப்பாகி 2 கோடியே பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்க உள்ளார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் சைதாப்பேட்டை பகுதிக்கு வருகை தந்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகளை ஆய்வு செய்து, இப்பணிகளை வேகப்படுத்தி தற்போது நிறைவு நிலைக்கு வந்திருக்கின்றது. மின்சார வாரியத்தின் சார்பில் கேபிள் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தனித்தனி மீட்டர் பொருத்தும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்பணிகளை 10 நாட்களில் முடித்து தருவதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் முதல் வாரம் பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகள் குலுக்கல் முறையில் நடைபெறவிருக்கிறது. இப்பணிகள் முடிவுற்ற பிறகு, பொங்கல் திருநாளையொட்டி, நானும் அமைச்சரும் இக்குடியிருப்பில் புதுமனை புகுவிழா பொதுமக்களோடு சேர்ந்து நடத்தவிருக்கிறோம். இதற்கு காரணமாக உள்ள முதல்வருக்கும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருக்கும் சைதை தொகுதி மக்கள் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.