புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில், கந்தர்வக்கோட்டை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தினை, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தலைமையில் இன்று குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, மாணாக்கர்களுக்கு சேர்க்கைக்கான ஆணைகளை வழங்கினார்கள்.
பின்னர் சட்டத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் 2024-25 ஆம் நிதியாண்டில் நடைபெற்ற சட்டசபையில் 10 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை அமைத்திட அறிவித்தார்கள். அந்தவகையில் இன்றைய தினம் ரூ.111 கோடி முதலீட்டில் 10 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் துவக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில், கந்தர்வக்கோட்டை அரசு தொழிற் பயிற்சி நிலையம் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. தற்போது, தற்காலிக கட்டிடமாக கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுகிறது.
இந்நிலையத்திற்கு 465 இலட்சம் கருவிகள், தளவாடங்களுக்கு நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கந்தர்வக்கோட்டை அரசு தொழிற் பயிற்சி நிலையத்திற்காக, கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி, குளத்தூர் வட்டம், நாஞ்சூர் கிராமத்தில் 3.5 ஏக்கர் அரசு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2024-25 -ஆம் ஆண்டுக்கான பயிற்சியாளர்கள் சேர்க்கை 31.12.2024 வரை நடைபெறுகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில், அட்வாண்ஸ்டு சி.என்.சி. டெக்னீசியன் 2 ஆண்டுகள், சென்ட்ரல் ஏசி பிளாண்ட் மெக்கானிக் 2 ஆண்டுகள், சர்வேயர் 2 ஆண்டுகள், இன்ட்ஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ் டெக்னீசியன் 1 ஆண்டு ஆகிய 4 நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தொழிற்பிரிவுகள் தொடங்கப்படுகிறது.
இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில், வருடத்திற்கு 112 மாணவர்கள் சேர்க்கை செய்யப்படுவார்கள். ஆண்/பெண் இருபாலரும் தொழிற்பயிற்சி பெற்று வேலை வாய்ப்பும் பெற முடியும். எனவே, தமிழக அரசின் மூலம் மாணாக்கர்களின் கல்விக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை, மாணாக்கர்கள் அனைவரும் உரிய முறையில் பெற்றுக்கொண்டு வாழ்க்கையில் உயர்ந்த நிலையினை அடைய வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
பின்னர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் மாணாக்கர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், மாணாக்கர்களுக்கு தேவையான, பள்ளி வகுப்பறைகள் கட்டுதல், புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் கட்டுதல், உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், உயர் பணிகளுக்கு செல்லும் வகையில் தொழிற் பயிற்சிகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்றைய தினம் கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கந்தர்வக்கோட்டை அரசு தொழிற் பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டை மற்றும் விராலிமலையில் 2 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களும், 11 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகிறது. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவிகளுக்கு பொருத்துநர், கடைசலர், இயந்திர வேலையாள், கம்மியர் மோட்டார் வண்டி, கம்பியாள், கம்மியர் கருவிகள், வெல்டர், பம்ப் மெக்கானிக், எலக்ட்ரீசியன், சிவில் இன்சினியரிங் அசிஸ்டெண்ட், எம்.ஆர்.ஏசி, கணினி இயக்குபவர், திட்டமிடுதல் உதவியாளர், மேனுபேக்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமேசன், அட்வான்ஸ்டு ஊேஊ மெஷினிங் டெக்னிசியன், மெக்கானிக் எலக்ட்ரிக் வெகிக்கிள், இன்டெஸ்டிரியல் ரோபோடிக்ஸ் மற்றும் மெனுபெக்சரிங் டெக்னிசியன் போன்ற தொழில்பிரிவுகளில் 2024 -ஆம் ஆண்டில் 1,121 பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவிகளுக்கு சான்று வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், அரசு மற்றும் முன்னணி தனியார் நிறுவனங்களில் 1,050 பயிற்சியாளர்கள் தொழிற்பழகுநராக மாதம் ரூ.8,000/- முதல் ரூ.16,000/- ஊதியத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, மாணாக்கார்கள் அனைவரும் தமிழக அரசின் கல்வி சார்ந்த திட்டங்களை பெற்று, கல்வியில் சிறந்து விளங்கி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அ.அக்பர்அலி, குன்றாண்டார்கோவில் ஒன்றிய குழுத் தலைவர் பாண்டிச்செல்வி கே.ஆர்.என்.போஸ், கீரனூர் பேரூராட்சித் தலைவர் த.ஜெயமீரா ரவிக்குமார், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் தவ.பாஞ்சாலன், பேரூராட்சி துணைத் தலைவர் அ.முகமது இம்தியாஸ், குன்றாண்டார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்கள் மா.சுந்தரகணபதி (கந்தர்வக்கோட்டை) (பொ), கோ.பாலசுப்ரமணியன் (புதுக்கோட்டை), தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர் மரு.செல்வராஜ், குளத்தூர் வட்டாட்சியர் கவியரசன், பள்ளி தலைமையாசிரியர் பரிமளம், கீரனூர் பேரூராட்சி செயல் அலுவலர் சிவராஜ் மற்றும் அண்ணாதுரை, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.