கஞ்சா வழக்கில் சென்னையில் சவுக்கு சங்கர் கைது 

கஞ்சா வழக்கில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட சவுக்கு மீடியா தலைமை செயல் அதிகாரி சங்கர் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டார்.

சென்னையைச் சேர்ந்த சங்கர் பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் கோவை போலீஸாரால் தேனியில் கைது செய்யப்பட்டார். அவர் தங்கியிருந்த விடுதி மற்றும் காரில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறி, அவர் மீது தேனி போலீஸார் கஞ்சா வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, கஞ்சா வழக்கிலும் சங்கர் கைது செய்யப்பட்டார். பின்னர், அடுத்தடுத்து பல்வேறு வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டதால், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சங்கர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மேலும், குண்டர் சட்டமும் ரத்தானது.

இந்நிலையில், சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கு மதுரை போதைப் பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச்செல்வன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கடந்த சில விசாரணைகளின் போதும் சங்கர் ஆஜராகததால், அடுத்த விசாரணையின்போது ஆஜராகாவிட்டால் பிடியாணை பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி எச்சரித்திருந்தார். அப்போதும் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் சவுக்கு சங்கருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, தேனி போலீஸார் சென்னைக்குச் சென்று, சவுக்கு சங்கரை கைது செய்தனர்.