‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மூலம் ஜிடிபி 1.5% வரை உயர வாய்ப்பு : ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் நாட்டு மக்கள் அனைவரது வளர்ச்சிக்கும் ஏற்றது என்றும், இத்திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1% முதல் 1.5% வரை உயரும் என்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராம்நாத் கோவிந்த், “இந்த திட்டம் நாட்டு மக்கள் அனைவரின் முன்னேற்றத்துக்கும் ஏற்றது. மற்ற அம்சங்களிலும், இந்தத் திட்டத்தை பின்பற்றுவது தேசத்துக்கும் உதவும். இந்தத் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய உலகத் தரம் வாய்ந்த பொருளாதார நிபுணர்களைக் கொண்ட குழுவை உருவாக்கி, அக்குழுவின் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளோம். இது நடைமுறைக்கு வரும்போது, ​​நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் தானாகவே 1% முதல் 1.5% அதிகரிக்கும்” என தெரிவித்தார்.

முன்னதாக, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு 191 நாட்கள் ஆய்வு செய்து, 18,626 பக்கங்களைக் கொண்ட தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் செப்டம்பர் 2, 2023 அன்று சமர்ப்பித்தது. இந்த திட்டத்தால் ஏற்படும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்து விவரித்த ராம்நாத் கோவிந்த், “இதன்மூலம் நமது பொருளாதாரம் 10% முதல் 11% வரை உயரும். இதன் காரணமாக, நமது நாடு உலகின் முதல் 3 அல்லது 4-வது பெரிய பொருளாதாரமாக திகழும்” என்று ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.