‘தமிழர்களின் நலன் காக்கப்பட திமுக ஆட்சியில் இருக்க வேண்டும்’ – அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்றால் திமுக ஆட்சியில் இருக்க வேண்டும், என சமூக வலைதள பயிற்சி முகாமில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

சிவகாசியில் திமுக சார்பில் ‘எக்காலமும் நம் களமே’ என்ற தலைப்பில் 2026 சட்டமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகள் குறித்த இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான சமூக வலைதள பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில்: களத்தில் நாம் அசகாய சூரர்களாக இருக்கலாம், ஆனால் நேற்று ஆரம்பித்து இருக்கக்கூடிய கட்சிகள் கூட, தமிழகத்தில் தங்களுக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருப்பதாக ஒரு மாயையை உருவாக்கி விட முடிகிறது. அதற்கு காரணம் அனைத்து தரப்பிலும் இருக்கக்கூடிய தன்னார்வலர்களை, ஆதரவாளர்களை களத்தில் ஒன்றுபடுத்திவிடுகிறார்கள்.

அந்த ஒன்றுபடுத்தும் பணியை நாம் செய்தால் களத்தில் நமக்கு இருக்கக்கூடிய சக்தியும், நமது அனுபவமும் சேர்ந்து 2026 தேர்தலில் முதல்வர் நிர்ணயித்து உள்ள 200 தொகுதிகளையும் தாண்டி நாம் வெற்றி பெற முடியும். நம்முடைய தலைவர்கள் மற்றும் சித்தாந்தங்களை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். தகவல் தொழில்நுட்ப புரட்சிக்கு பின் சமூக வலைதளங்கள் மூலம் ஒரு நொடி பொழுதில் லட்சக்கக்கானோரை சென்று சேரக்கூடிய வாய்ப்பை பெற்றுள்ளோம்.

நமது கட்சியின் பெயருக்கும், தலைவர்களின் புகழுக்கும் ஊரு விளைவிக்காத வகையில் பணியாற்ற வேண்டும். கண் இமைக்கக்கூடிய நேரத்திற்குள் 2026 தேர்தல் வந்துவிடும். முதல்வர், துணை முதல்வரின் திட்டங்கள், அறிக்கைகளை சமுதாயத்தில் அனைத்து அடுக்குகளில் உள்ள மக்களுக்கும் எடுத்து சொல்ல வேண்டும். திமுகவின் கொள்கைகள், அரசு திட்டங்கள் மற்றும் பணிகளை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.

தமிழ் மொழியின் பண்பாடு, கலாச்சாரத்தை காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாம் பயணிக்க வேண்டும். இந்த பணி நாம் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதற்காக அல்ல, தமிழர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்றால் திமுக ஆட்சியில் இருக்க வேண்டும். திமுக ஆட்சியில் தொடர வேண்டியது காலத்தின் அவசியம், என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். மேயர் சங்கீதா, தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் மதுரை பாலா, மாநகர திமுக செயலாளர் உதயசூரியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.